தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தஞ்சோங் காத்தோங் சாலை புதைகுழி: போக்குவரத்துக்கு முழுமையாகத் திறப்பு

2 mins read
21adfe3a-739f-4503-8839-086dc2ce8d3e
புதைகுழி ஏற்பட்ட தஞ்சோங் காத்தோங் சவுத் சாலையின் பகுதி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒரு வாரத்திற்கு முன்னர் புதைகுழி ஏற்பட்டதால் சீரமைப்புக்காக மூடப்பட்டிருந்த தஞ்சோங் காத்தோங் சவுத் சாலை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) காலை 5 மணிக்கு முழுமையாகத் திறக்கப்பட்டது.

காலை உச்ச நேரத்தில் போக்குவரத்து அமைதியாகவும் சீராகவும் இருந்ததாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி குறிப்பிட்டது.

தஞ்சோங் காத்தோங் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகிலுள்ள ஏம்பர் கார்டன்ஸ் சாலையில் குழாய்கள் பதித்தல், மவுண்ட்பேட்டன் சாலையிலிருந்து தஞ்சோங் காத்தோங் சவுத் நோக்கிச் செல்லும் துணைச் சாலையில் நடைபெறும் பணிகள் உள்ளிட்டவை அப்பகுதியில் நடைபெற்று வந்தன.

பாதிக்கப்பட்ட சாலைப் பகுதி படிப்படியாகத் திறக்கப்பட்டது. ஈஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலையிலிருந்து மவுண்ட்பேட்டன் சாலை வரையிலான பகுதி ஆகஸ்ட் 2ஆம் தேதி நண்பகலில் திறக்கப்பட்டது. எதிர் பகுதி ஆகஸ்ட் 4ஆம் தேதி காலை 5 மணிக்குத் திறக்கப்பட்டது.

கிட்டத்தட்ட ஒரு வாரக் காலம் மூடப்பட்டிருந்த சாலை போக்குவரத்துக்கு மீண்டும் திறக்கப்பட்டதிலும் பேருந்துச் சேவைகள் 36, 48 ஆகியவை வழக்க நிலைக்குத் திரும்பியது குறித்தும் குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவித்தது.

சாலை மூடப்பட்டிருந்தபோது அப்பேருந்துச் சேவைகள் தற்காலிகமாக வேறு பாதையில் திருப்பி விடப்பட்டதுடன் அந்த வழித்தடத்தில் சில பேருந்து நிறுத்தங்களை அவை தவிர்த்தன.

ஜூலை 26 அன்று மாலை தஞ்சோங் காத்தோங் சவுத் சாலையில் திடீரெனப் புதைகுழி தோன்றியதில், அவ்வழியில் வந்த ஒரு காரும் அதன் ஓட்டுநரும் குழிக்குள் விழுந்தனர்.

சம்பவ இடத்தில் இருந்த ஊழியர்கள் ஓட்டுநரை மீட்டனர். அவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தசை வலி ஏற்பட்டதாகவும் ஜூலை 29ஆம் தேதி வரை மருத்துவமனையில் குணமடைந்து வந்ததாகவும் முன்னர் தெரிவிக்கப்பட்டது.

ஜூலை 27ஆம் தேதி, பாதிக்கப்பட்ட கார் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டது.

ஜூலை 28ஆம் தேதி அதிகாலையில் மண், சிமென்ட், தண்ணீர் கலவையால் குழி நிரப்பப்பட்டது. அதன் பிறகு தரையைச் சோதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஜூலை 29 அன்று, நீடித்த நிலைத்தன்மை சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ, காயமடைந்த ஓட்டுநரிடமும் சிரமத்திற்கு ஆளானவர்களிடமும் தனது அமைச்சு சார்பாகவும் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் சார்பாகவும் மன்னிப்புக் கேட்டார். அந்தச் சம்பவம் நடந்திருக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.

கட்டட, கட்டுமான ஆணையம் (BCA) சம்பவம் குறித்து தனிப்பட்ட வகையில் விசாரணையை மேற்கொள்ளும. நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சும் உள் விசாரணையை மேற்கொள்ளும்.

குறிப்புச் சொற்கள்