சிங்கப்பூரில் மின்படிக்கட்டுகளில் செல்லும்போது அதன் இருபுறமும் நிற்குமாறு பயணிகளைக் கேட்டுக்கொள்ளும் அறிவிப்புப் பலகைகள் குறைந்தது ஒரு பெருவிரைவு ரயில் நிலையத்திலாவது வைக்கப்பட்டுள்ளன.
சிட்டி ஹால் ரயில் நிலையத்தில் ராஃபிள்ஸ் சிட்டிக்குச் செல்லும் வெளியேறும் வழியருகே நவம்பர் 5ஆம் தேதி எஸ்எம்ஆர்டி இலச்சினைக் கொண்ட அறிவிப்புப் பலகை காணப்பட்டது.
அதில், ஒரு படியில் இருவர் அருகருகே நிற்கும் படத்துடன் ‘படியைப் பகிர்வோம், நெரிசலைத் தவிர்ப்போம்’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
அதற்குமேல் இருந்த மஞ்சள் நிற அறிவிப்பில், மின்படிக்கட்டின் ஏதேனும் ஒரு பக்கத்தில் நிற்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இருப்பினும், வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) நண்பகலுக்கு முன்னர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் அங்குச் சென்றபோது, பயணிகள் தொடர்ந்து இடப்பக்கம் நிற்பதையும் அவசரமாகச் செல்வோர் மட்டும் வலப்பக்கம் நடந்து செல்வதையுமே கண்டார்.
நீண்டகாலமாகச் சிங்கப்பூரில் மின்படிக்கட்டின் இடப்பக்கம் நிற்பதும், அவசரமாகச் செல்வோர் வலப்பக்கம் நடந்து செல்வதுமே வழக்கமாக உள்ளது.
ஆனால், லண்டனில் 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மூன்று வாரச் சோதனையில், மின்படிக்கட்டுகளில் பயணிகள் இருபுறமும் நின்று பயணித்தால் அதன் ஏற்றிச்செல்லும் திறன் 30 விழுக்காடு வரை அதிகரிப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து பெய்ஜிங், ஷாங்காய், தோக்கியோ, தைவான் ஆகிய இடங்களிலும் மின்படிக்கட்டின் இருபுறமும் நிற்கும் வழக்கம் ஊக்குவிக்கப்பட்டது.
தென்கொரியாவில் 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் 1,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், மின்படிக்கட்டின் வலப்பக்க பாகங்கள் 95 விழுக்காட்டிற்கும் அதிகமாகத் தேய்மானம் அடைவதும் அதனால் பராமரிப்புச் செலவு கூடுவதும் தெரியவந்தது.
இதையடுத்து, அந்நாட்டிலும் நாடு தழுவிய புதிய விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டது.
இருப்பினும், சிங்கப்பூரில் அந்த முயற்சிக்குச் சமூக ஊடகங்களில் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளன.
ரெடிட் தளத்தில் சிலர், இதனால் வரிசையில் காத்திருக்கும் நேரம் குறையும் எனக் கூறி அதனை வரவேற்றுள்ளனர்.
ஆயினும், பயணிகள் தங்களுக்கு விருப்பமான வேகத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை இது தடுக்கும் என்பதால் இத்திட்டம் நடைமுறைக்கு உதவாது என்றும் சிலர் கூறியுள்ளனர்.
