உட்லண்ட்சில் எஸ்எம்ஆர்டி பேருந்து தீப்பிடித்து எரிந்தது

பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றம்

உட்லண்ட்சில் எஸ்எம்ஆர்டி பேருந்து தீப்பிடித்து எரிந்தது

2 mins read
16beb1f6-bb9b-424b-8abf-d7beccf866f1
உட்லண்ட்ஸ் அவென்யூ 1ல் தீப்பற்றி எரிந்த பேருந்து. - படம்: ஹானி சோச/ஃபேஸ்புக்
multi-img1 of 3
Google News Preferred Icon

உட்லண்ட்ஸ் அவென்யூ 1ல் உள்ள உட்குரோவ் தொடக்கப்பள்ளிக்கு அருகே செவ்வாய்க்கிழமை (மே 5) எஸ்எம்ஆர்டி பேருந்து ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது.

தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பேருந்து எண் 967 பகல் 1.30 மணியளவில் பயணிகள் இறங்குவதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது, ஓட்டுநர் பகுதியிலிருந்து புகை வருவதை பேருந்து ஓட்டுநர் கவனித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் உடனடியாக அனைத்துப் பயணிகளையும் பேருந்திலிருந்து இறக்கி பாதுகாப்பான தூரத்திற்கு அழைத்துச் சென்றார் என்று எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் வின்சென்ட் கே தெரிவித்தார்.

சிறிது நேரத்தில் பேருந்தின் முன்பகுதியில் தீப்பிடித்தது. உடனடியாக பேருந்து கட்டுப்பாட்டு மையத்திற்கும், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பேருந்து தீ பற்றி எரிந்ததில் அப்பகுதியில் புகை சூழ்ந்தது.

பகல் 1.40 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் தண்ணீரைப் பாய்ச்சி தீயை அணைத்தனர்.

எஸ்எம்ஆர்டி ஊழியர்களும் பொதுமக்களும் பாதுகாப்பான தூரத்திலிருந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

விபத்து குறித்து நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ‘MyTransport.SG’ இணையத்தளம் பகல் 2 மணியளவில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

தீ விபத்து காரணமாக, அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்துச் சேவைகள் 901, 901M, 967 ஆகியவை தற்காலிகமாக மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டன.

பயணிகளும் ஓட்டுநரும் காயமின்றித் தப்பியது நிம்மதியளிப்பதாக மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹானி சோ தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

உட்குரோவ் பள்ளி ஊழியர்கள், குடியிருப்பாளர்களின் துரித உதவிக்கு நன்றி தெரிவித்த அவர், அதிகாரிகளுடன் தாம் தொடர்பில் இருப்பதாகக் கூறினார்.

தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் தண்ணீரைப் பாய்ச்சி தீயை அணைத்தனர்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் தண்ணீரைப் பாய்ச்சி தீயை அணைத்தனர். - படம்: ஹானி சோச/ஃபேஸ்புக்
குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்உட்லண்ட்ஸ்தீவிபத்துஎஸ்எம்ஆர்டிபேருந்துதீ