சிங்கப்பூரின் இந்திய அடையாளத்தை வலுப்படுத்த அமைக்கப்பட்ட ‘இணை’ எனப்படும் புதிய இந்தியச் சமூக ஈடுபாட்டு, மேம்பாட்டுக் குழு (INEI), மூன்று முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தும் என்று போக்குவரத்து, சட்ட மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை தெரிவித்துள்ளார்.
இந்தியச் சமூகத்தில் உள்ள நலிந்த, பின்தங்கியவர்களுக்குச் சிறந்த ஆதரவை வழங்குதல், சிங்கப்பூர் இந்திய அடையாளத்தை வலுப்படுத்துதல், இளம் இந்தியத் தலைவர்களின் தொடர் வரிசையை உருவாக்குதல் ஆகியவை அவை.
‘இணை’ தற்போதைய கட்டமைப்பு ரீதியான சவால்களுக்குத் தீர்வு காண முயலும். அமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பின்மை, இளையர்களின் ஈடுபாட்டிற்கான வாய்ப்புகள் குறைவாக இருத்தல், சம்பந்தப்பட்ட தரப்பினரை ஒன்றிணைக்கவும் முன்னுரிமைகளைச் சீரமைக்கவும் பெரிய அளவில் முயற்சிகளை ஒருங்கிணைக்கவும் ஒட்டுமொத்தத் தளம் இல்லாதிருத்தல் போன்ற சவால்களுக்குத் தீர்வுகாண அது செயல்படும் என அவர் வலியுறுத்தினார்.
‘இணை’ குழுவின் இணைத் தலைவரும் ஆலோசகருமான திரு முரளி பிள்ளை, குழுவின் முதல் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அக்குழு, ஒட்டுமொத்த ஒருங்கிணைப்புக்கும் சமூகச் செயலாக்கத்திற்கும் ஒரு தளமாக அமையும் என்றார் அவர்.
முன்னதாக, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது கலாசார, சமூக, இளையர்துறைத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் ‘இணை’ குழு குறித்துப் பகிர்ந்துகொண்டிருந்தார். அதைத் தொடர்ந்து, சனிக்கிழமை (ஏப்ரல் 25) ‘கிராண்ட் காப்த்தோர்ன் வாட்டர்ஃபிரன்ட்’ ஹோட்டலில் ‘இணை’யின் முதல் கருத்தரங்கு இடம்பெற்றது.
கருத்தரங்கில் கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும், உள்துறை அமைச்சருமான கா. சண்முகம், கல்வி, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி, அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டேரல் டேவிட் ஆகியோரும் சிறப்பு வருகையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
அமைச்சர் கா. சண்முகம் ஓர் இணக்கமான சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தை உருவாக்கவும், சமூகத்தை முன்னோக்கி அழைத்துச் செல்லவுமான முயற்சிகளை ஒருங்கிணைக்கும் ஒரு தளமாக இக்குழுவை முதலில் முன்மொழிந்தார்.
கருத்தரங்கில் இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த 330க்கும் மேற்பட்ட அமைப்புகளைப் பிரதிநிதித்து 600க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
‘இணை’யின் பணிகளைச் செயல்படுத்த மூத்தோர் சிலருடன் பெரும்பாலும் இளம் இந்தியத் தலைவர்களை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக் குழு ஒன்று அமைக்கப்படும் என்று திரு முரளி பிள்ளை தெரிவித்தார்.
“இளம் இந்தியத் தலைவர்களை ஈடுபடுத்தும் இந்த முடிவு உத்தி சார்ந்ததாகும். அவர்களை வளர்த்தெடுப்பதற்கும் அவர்களுக்குத் தலைமைத்துவ வாய்ப்புகளை வழங்குவதற்குமானது அது,” என்றார் அவர்.
மேலும், இந்தியச் சமூகத்தின் மூத்த தலைவர்களை உள்ளடக்கிய வளக் குழுக்கள் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு ஆதரவளிக்கும் என்றார் துணையமைச்சர்.
இணையின் நான்கு செயற்குழுக்கள், சமயம், சமூக-பொருளாதாரம், கலாசாரம், இளையர்கள், விளையாட்டுகள், மொழி, மரபு, கலைகள் ஆகியவை தொடர்புடைய துறைகளில் உள்ள இந்திய அமைப்புகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் அவை ஒவ்வொன்றுக்கும் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ஒருவர் தலைமையேற்பார் என்றும் திரு முரளி பிள்ளை விளக்கினார்.
குழுவின் இணைத் தலைவராகத் தாம் சமயம், சமூக-பொருளாதாரம் அம்சங்களில் கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், சமயச் செயற்குழு வாயிலாக, சிறைத்தண்டனையை நிறைவேற்றும் இந்தியர்கள் மீண்டும் குற்றம் செய்வதை மேலும் குறைப்பதில் கவனம் செலுத்துவதை ஆராய உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகச் சொன்னார்.
சமூக-பொருளாதாரம் அளவில் நற்பணிப் பேரவை நடத்திய கருத்தாய்வு மூலம் சிரமப்படும் இந்தியக் குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களை சிண்டா குடும்பச் சேவை மையத்திடமோ அடித்தள அமைப்பு ஆலோசகரிடமோ பரிந்துரை செய்ய, ஒவ்வோர் இந்திய நற்பணிச் செயற்குழுவும் விழிப்புடன் செயல்படுவதற்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளதாகத் திரு முரளி பிள்ளை குறிப்பிட்டார்.
ஆலோசகர் என்ற முறையில் தாம் இந்த முயற்சிகளுக்குப் பொறுப்பேற்க ஓரிரண்டு இளம் இந்தியத் தலைவர்களை நியமிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அந்த இளம் தலைவர்களை வளர்த்தெடுப்பதே தமது பங்காக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்தியச் சமூகத்தை முன்னோக்கி அழைத்துச்செல்ல, நிரூபிக்கப்பட்ட திறன்களைக் கொண்ட இளம் இந்தியத் தலைவர்கள் அணி, பாதிக்கப்பட்டோர்க்கு உதவ பன்முகத்தன்மை கொண்ட நமது இந்தியச் சமூகத்தின் பலத்தை ஒருங்கிணைத்துச் செயல்படும் அணுகுமுறை, ஒரு பொதுவான நோக்கத்திற்காக ஒன்றிணைக்கப்பட்ட மிகவும் இணக்கமான, ஒற்றுமையான இந்தியச் சமூகம் ஆகியவை உருவாகும்,” என்று திரு முரளி பிள்ளை கூறினார்.

