தைவானுக்கு தனியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு காணாமல் போன சிங்கப்பூர் மாணவியின் சடலம் கடலில் கண்டெடுக்கப்பட்டது.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகத்தில் படிக்கும் 22 வயது அமெலியா மூ வென் தைவானுக்கு சென்றபின் தமது குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார்.
அமெலியா சிங்கப்பூருக்குத் திரும்புவதற்கு இருநாள்களுக்கு முன்னர் அவரிடம் இருந்து எந்த தகவலும் கைப்பேசி அழைப்பும் குடும்பத்தினருக்கு வரவில்லை.
அதன்பின்னர் அவரது சடலம் தைவானின் கிழக்குப் பகுதியில் உள்ள கடலில் கண்டெடுக்கப்பட்டது.
மே 7ஆம் தேதி காலை ஹூவலியனில் உள்ள பெய்பூ கிராமத்தின் கடற்கரையோரத்தில் ஒரு பெண்ணின் சடலம் மிதந்து வந்தது. சடலத்தில் எந்த காயங்களும் தென்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
அமெலியா நீரில் மூழ்கி இறந்திருக்கக்கூடும் என்று ஆரம்பக்கட்ட விசாரணையின் முடிவுகள் கூறுகின்றன.
மாணவியின் மரணத்தில் எந்த சூதும் இல்லை என்று தைவானிய காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாண்ட நபரின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.