பன்னாட்டு அரசியலில் சோ-நாசர்!

5 mins read
தமிழகத்தின் புகழ்பெற்ற, முன்னோடி ஊடகவியலாளர்களில் ஒருவர் மாலன்.
fa5b0a82-33f7-46dc-9404-db3781235f49
தமிழ் ஊடகத்துறையில் முன்னோடி முயற்சிகளை மேற்கொண்டவர் திரு மாலன் - படம்: மாலன்/tamil.wiki

மாலன்

சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு அண்மையில் தனது 90வது ஆண்டைக் கொண்டாடியது. எனக்கும் தமிழ் முரசுக்கும் நெடிய உறவு உண்டு.

இந்தியாவிலிருந்து, ஏறத்தாழ நான்கு ஆண்டுகள், அதில் வாரந்தோறும்  சொல்லாத சொல் என்று ஒரு பத்தி எழுதிக்கொண்டிருந்தேன். 2004ஆம் ஆண்டு அந்தக் கட்டுரைகள் நூல் வடிவம் பெற்றபோது தமிழ் முரசின் அன்றைய ஆசிரியர் டாக்டர் சித்ரா ராஜாராம் “தமிழ் முரசின் 66 ஆண்டு கால வரலாற்றில் முரசில் வெளிவந்த சில இலக்கியப் படைப்புகளும் கட்டுரைகளும் தொகுப்பாக வந்துள்ளன. எனினும் நான் அறிந்த வரையில் கருத்துக் கட்டுரைகள் (columns) இதுவரை தொகுப்பாக வெளிவந்ததில்லை. இது வருத்தம் தரும் செய்தி என்றாலும், இப்போதாவது ஓர் ஆவணம் உருவாகிறதே என்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது,” என்று எழுதினார். அந்த வகையில் தமிழ் முரசின் வரலாற்றில் ஒரு சிறு காற்புள்ளியாகவாவது நான் இடம் பெறுகிறேன்.

மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரியும் முன் கோலாலம்பூர், சிங்கப்பூர் ஆகிய இரண்டு இடங்களிலிருந்தும் தமிழ் முரசு வந்து கொண்டிருந்தது. தமிழ்ச் சமூகத்தின் முகமாகவும் அவர்களது அரசியலின் குரலாகவும் அது விளங்கியது.

அப்போது தமிழ் முரசு12 பக்கங்கள். தொடக்கத்தில் 8 பக்கங்கள் கோலாலம்பூரிலும் நான்கு பக்கங்கள் சிங்கப்பூரிலும் அச்சிடப்பட்டு வந்தன.

ஒரு கட்டத்தில் தமிழ் முரசில் இந்தியச் செய்திகள், குறிப்பாகத் தமிழ்நாட்டுச் செய்திகளே அதிகம் வந்து கொண்டிருந்தன. அதிலும் சென்னையிலிருந்து எழுதப்பட்ட “சென்னைக் கடிதம்” என்ற பகுதி பரபரப்பாகச் ‘செய்தி’களைத் தந்து கொண்டிருந்தது.

அது தமிழரல்லாத மற்ற சிங்கப்பூரர்களின் புருவத்தை உயர்த்தியது. அவர்கள் இதுகுறித்து சில கேள்விகளை எழுப்பினார்கள். மே 28, 1971 தேதியிட்ட நியூ நேஷன் என்ற பத்திரிகையில், பால் எலீசா என்பவர் எழுதினார்: “இந்தப் பத்திரிகைகளில் (தமிழ் முரசு, தமிழ் மலர்) வரும் செய்திகளை ஒருவர் ஆராய்ந்தால் தினமும் 10 பக்கங்கள் இந்தியச் செய்திகளுக்கு - குறிப்பாகச் சென்னையிலிருந்து வரும் செய்திகளுக்கு – ஒதுக்கப்படுவதைக் காணலாம். இந்த இதழ்கள் ஞாயிறன்று தங்கள் வாசகர்களுக்குச் சென்னை அரசியல் செய்திகளைக் கொண்ட ஒரு செய்திக் கடிதத்தைச் சிறப்பு விருந்தாக அளிக்கின்றன. சில நேரம் அந்தக் கடிதம் எழுதுபவர் தன் வசமிழந்து விடுவதையும் இந்திய அரசியல் பற்றிப் பரபரப்பாக எழுதுவதையும் பார்க்கலாம்.”

இது தமிழ் நாளிதழ் குறித்து பிற மொழிக்காரர்கள் கொண்டிருந்த அபிப்பிராயத்தின் ஒரு சிறு துளி. ஆனால் அவர்கள் சொல்லும் ‘தன் வசம் இழந்து விடுதல்’, ‘பரபரப்பு’ என்ற விமர்சனங்கள் மிகை அல்ல.

ஓர் உதாரணம்: அமெரிக்கா போன்ற அதிபர் முறைக்கு இந்தியா மாறலாம் என்ற கருத்தை முன்வைத்து அப்போது தமிழக அமைச்சராக இருந்த வெங்கட்ராமன் போகிற போக்கில் உதிர்த்த ஒரு கருத்துக்கு கிட்டத்தட்ட ஒரு முழுப் பக்கம் ஒதுக்கி சென்னைக் கடிதம் விவாதித்தது. அப்போது அது போட்ட தலைப்பு “வெங்கட்ராமன் திட்டம் ஒரு தமாஷ்” உள்ளே ஒரு துணைத் தலைப்பு: “பாராளுமன்றத்திற்கும் ஜனாதிபதிக்கும் ஓயாத போர் மூளும்” (பின்னாளில் வெங்கட்ராமன் இந்திய ஜனாதிபதியானது வரலாற்றின் நகை முரண்!)

சென்னைக் கடிதத்திற்கு வெளியேயும் பரபரப்பான தலைப்புகளுக்குப் பஞ்சமில்லை. சில உதாரணங்கள்: “பிரதம மந்திரிப் பதவியைப் பிடிக்கக் காமராஜர் திட்டம்”, “மார்பகம் திறந்த நடனம் துங்கு கண்டுகளித்தார்”, “சாய்வு நாற்காலி அரசியல்வாதி, பெரியார் பற்றி அண்ணா விளக்கம்”. 

இந்தத் தலைப்புகளை இன்று நாம் புன்னகையோடு கடந்து போய்விடலாம். ஆனால் சில தலைப்புகள் அன்றே பெரும் நகைச்சுவையாக இருந்தன. எடுத்துக்காட்டாக, “இந்தியாவின் மூன்றாவது அணுசக்தி நிலையம் - கீழ்ப்பாக்கத்தில் அமைக்கப்படும்”. சென்னையில் கீழ்ப்பாக்கம் பகுதியில் மனநல மருத்துவமனை இருந்தது, இருக்கிறது. புத்தி பிறழ்ந்தவர்களைப் போல நடந்து கொள்பவர்களை ‘கீழ்ப்பாக்கம் கேஸ்’ என்று கிண்டல் செய்வது அப்போது வழக்கமாக இருந்தது. இந்தத் தகவலை இந்தத் தலைப்போடு பொருத்திப் பாருங்கள், பகீரென்று இருக்கும்.

சில தலைப்புகள் இன்றைய நடுவயதுக்காரர்களுக்குத் திகைப்பைத் தரும். “அல்ஜீயர்ஸ் மாநாடு- சோ, நாசர் கூடிப் பேசினர்” என்றொரு தலைப்பு. நடிகரும் பத்திரிகை ஆசிரியருமான சோ எதற்கு அந்த மாநாட்டிற்குப் போனார்?, அவர்  நடிகர் நாசரோடு பேசுவதானால் சென்னையிலே பேசலாமே? அதற்கு எதற்கு கெய்ரோ போக வேண்டும்? என அவர்கள் குழம்பக்கூடும். இந்தச் சோ, சீன அதிபராக இருந்த சோ என் லாய். (அவரைத் தமிழ்ப் பத்திரிகைகள் சூ என் லாய் என்று எழுதும். ஒருவேளை இதுதான் சரியான உச்சரிப்பாக இருக்கக்கூடும்.) இதில் குறிப்பிடப்படும் நாசர் எகிப்தின் அதிபரான ஜமால் அப்துல் நாசர் ஹுசைன்.

செய்திகள், அதன் தலைப்புகள் வேண்டுமானால் இன்று சிரிப்பையோ, குழப்பத்தையோ அளிக்கலாம். ஆனால், அன்று தமிழ் முரசில் வெளியான விளம்பரங்கள் சுவாரஸ்யமாக இருந்தன. “நாளை ஏக காலத்தில் நான்கு தியேட்டர்களில் நள்ளிரவுக் காட்சி” என அறிவிக்கிறது சிவாஜி கணேசன் நடித்த சாந்தி பட விளம்பரம். ஆனால் எம்.ஜி.ஆரின் வெற்றிப்படமான எங்க வீட்டுப் பிள்ளையின் இரு விளம்பரங்கள் அளவில் சிறியதாய் ஒரு மரண அறிவிப்பு விளம்பரத்திற்கு அருகில் இடித்துக்கொண்டு நிற்கின்றன. இந்தியாவிலிருந்து வரும் புகையிலைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தங்களது பீடிகளை குடியானவர்களும் ஆபீசர்களும் விரும்பிப் புகைப்பதாக ஒரு விளம்பரம் பெருமைப்பட்டுக் கொள்கிறது. சிங்கப்பூரில் குடியானவர்கள்!

தமிழ் முரசு தனது நெடிய பயணத்தில் நிறைய மாறியிருக்கிறது.  செய்தி சேகரித்தல், செய்தி வெளியிடுதல், தொழில்நுட்பம் இவற்றில் இன்றையத் தமிழ் முரசு நவீனமடைந்திருக்கிறது. இன்று சத்தம் குறைவு, சாரம் மிகுதி. பத்திகளை வெளிநாட்டிலிருந்து தருவிக்க வேண்டிய நிலை மாறிவிட்டது. உள்ளூரிலேயே நிறைய எழுத்தாளர்கள் உருவாகிவிட்டார்கள். தமிழ் முரசு அளித்த வாய்ப்பின் மூலம் பல எழுத்தாளர்கள் மலர்ந்திருக்கிறார்கள். தமிழ் மொழிக்கும் கல்விக்கும் தமிழ் முரசு ஆற்றிய பங்களிப்பு பெருமைக்குரியது

விளம்பரங்களுக்குப் பெரிய வாய்ப்புகள் இல்லாத, குறைந்த அளவில் தமிழர்கள் நெடிதுயர்ந்த கட்டடங்களில் வாழும் ஒரு சிறிய தீவில் தமிழ் நாளிதழ் நடத்துவது அன்றும் இன்றும் சவாலான காரியம்தான். 

சிங்கப்பூரில் தமிழ் இதழ்களுக்கு எதிர்காலம் உண்டா என்பது அவ்வப்போது தலைகாட்டும் கேள்வி. இதுகுறித்து, இன்றல்ல, 46 ஆண்டுகளுக்கு முன்பே, 1979 ஜூனில், சிங்கப்பூர் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை இரண்டு நாள் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. அதில் பேசிய திரு. வை.திருநாவுக்கரசு (அப்போது அவர் தமிழ் முரசின் ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்கவில்லை. கலாசார அமைச்சின் பத்திரிகைத் தொடர்பு அதிகாரியாக இருந்தார்) சிங்கப்பூர் தமிழ் இதழ்களின் நூறாண்டு வரலாற்றைச் சுட்டிக்காட்டி பின், “தமிழ்ச் செய்தித்தாள்கள் சமூக உணர்வால் நிரம்பியிருந்தபோதும், வாசகர்கள் ஆதரவு போதுமான அளவு இல்லாததாலும் திறனற்ற நிர்வாகத்தாலும் தமிழ் இதழ்கள் வீழ்ச்சியடைந்தன,” எனக் குறிப்பிட்டார்.

அந்த எச்சரிக்கை மணி எப்போதும் நம் மனத்தில் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும். இந்த இரண்டு பலவீனங்களையும் வென்று காட்டுவது என்பதுதான் இன்றும் தமிழ் இதழ்கள் (தமிழகத்தில் வெளியாகும் தமிழ் இதழ்கள் உட்பட) முன்னிருக்கும் சவால்.

தமிழ் முரசு நூறு ஆண்டை எட்டும்போது நான் மண்ணில் இருப்பேனா விண்ணில் இருப்பேனா என அறியேன். பெரியாழ்வார் சொன்னதுபோல “அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்”: தமிழ் முரசு இன்னும் நூறாண்டு இருந்து தமிழ்ச் சமூகத்திற்குத் தொண்டாற்றட்டும்! 

குறிப்புச் சொற்கள்