செயற்கை நுண்ணறிவு வழிச் சமூக மேம்பாடு

செயற்கை நுண்ணறிவு வழிச் சமூக மேம்பாடு

2 mins read
9953094f-677b-445b-be6b-14e903c7ba92
துணை அமைச்சர் ஜாஸ்மின் லாவ் விழாவின் செயற்கை நுண்ணறிவுக் கற்றல் சாவடிகளைப் பார்வையிட்டார். - படம்: ஏஐ சிங்கப்பூர்

செயற்கை நுண்ணறிவைச் சமூக மேம்பாட்டிற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதை மாணவர்களிடையே ஊக்குவிக்கும் நோக்கோடு ‘நன்மைக்கான செயற்கை நுண்ணறிவு விழா’ (AI for Good Festival) அரங்கேறுகிறது.

ஜூலை 8 முதல் 10 வரை ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த திறன்கள், கல்வியில் அதன் சரியான பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை நாடு முழுதும் உள்ள 5,000க்கும் மேற்பட்ட இளையர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், இந்த தேசிய அளவிலான புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதத்தில் தொழில்நுட்பக் கல்விக்கழகத்தின் கிழக்குக் கல்லூரியிலும் இவ்விழா நடைபெறவுள்ளது.

‘ஏஐ சிங்கப்பூர்’ (AI Singapore) அமைப்பு, அமேசான் வெப் சர்வீசஸ், மைக்ரான் டெக்னாலஜி (Micron Technology) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, ‘டிஜிட்டல் ஃபார் லைஃப்’ (Digital for Life) இயக்கத்தின் ஒரு பகுதியாக முதல் முறையாக இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

சிங்கப்பூரின் மேம்படுத்தப்பட்ட தேசியச் செயற்கை நுண்ணறிவு உத்தி 2.0 திட்டத்திற்கு இணங்க இம்மூன்று நாள் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் செயற்கை நுண்ணறிவின் உருமாற்றத்திற்கு ஏற்றவாறு முன்னேற வேண்டும். இம்மாற்றத்தில் யாரும் பின்தங்கிவிடாமல் பார்த்துக்கொள்வதே சமூகத்தின் வெற்றி,” என்றார் தகவல், மின்னிலக்க மேம்பாடு, கல்வித் துணை அமைச்சர் ஜாஸ்மின் லாவ்.

இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் அவர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இளையர்களால் வடிவமைக்கப்பட்ட, விளையாட்டு வடிவிலான ஐந்து செயற்கை நுண்ணறிவுச் சாவடிகள் இவ்விழாவில் இடம்பெற்றுள்ளன.

அதோடு, தொழில் நிறுவனங்கள், சமூகப் பங்காளிகளோடு இணைந்து இளையர்கள் சமூக, சுற்றுச்சூழல், சுகாதாரச் சிக்கல்களுக்குச் செயற்கை நுண்ணறிவு மூலம் தீர்வுகாணவும் செயல்பட்டு வருகின்றனர்.

‘அட்லாஸ்’ அமைப்பு குறித்து மேலும் விவரங்களைக் கேட்டறிந்த துணை அமைச்சர் ஜாஸ்மின் லாவ்.
‘அட்லாஸ்’ அமைப்பு குறித்து மேலும் விவரங்களைக் கேட்டறிந்த துணை அமைச்சர் ஜாஸ்மின் லாவ். - படம்: விஷ்ருதா நந்தகுமார்

சிங்கப்பூர் நில ஆணையத்தோடு இணைந்து ஒருங்கிணைந்த இணையத்தளத்தை உருவாக்கியுள்ளனர் சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த ‘அட்லாஸ்’ குழுவினர்.

இடஞ்சார்ந்த மாற்றங்களைக் கண்டறிந்து, கட்டடப் பதிவுகளைத் தானியங்கி முறையில் பிரித்தெடுக்க இத்தளம் உதவுகிறது.

“பாரம்பரியப் பள்ளிப் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட கருத்துகளை ஆராய்வதற்கும், அதே நேரத்தில் எனது வேலையின் வேகத்தையும் தரத்தையும் மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு பெருந்துணை புரிகிறது,” என்றார் ‘அட்லாஸ்’ குழு உறுப்பினர் இலியாஸ் சாம், 19.

மின்னிலக்க உள்ளடக்கம், நீடித்த நிலைத்தன்மை ஆகியவற்றை ஊக்குவித்து, பொது நலனுக்காகச் செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்றும் இத்திட்டங்கள் காட்டுகின்றன.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த திறன்களும் வாய்ப்புகளும் வல்லுநர்கள், பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமன்றி, சமூகத்தில் உள்ள அனைவர்க்கும் சமமாகக் கிடைக்க இவ்விழா வழிவகுக்கிறது.

“இளையர்கள் முதல் பொதுமக்கள்வரை அனைவரும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் புரிதலுக்கும் அப்பால், அன்றாட வாழ்க்கையில் மதிப்புமிக்க வழிகளில் அதனைப் பயன்படுத்துவதே முக்கியம்,” என்றார் ஏஐ சிங்கப்பூர் அமைப்பின் திறன், கட்டமைப்புப் பிரிவின் இயக்குநர் கூ செங்மெங்.

தனிப்பட்ட துறை சார்ந்த திறனோடு செயற்கை நுண்ணறிவு சார்ந்த திறனிலும் இளையர்கள் திறம்பட விளங்க இவ்விழா உதவுகிறது.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுகற்றல் விழாதிறன் மேம்பாடு