சீனாவில் சமூக நிர்வாக மாநாடு: சுகாதார அமைச்சர் ஓங் கலந்துகொள்கிறார்

சீனாவில் சமூக நிர்வாக மாநாடு: சுகாதார அமைச்சர் ஓங் கலந்துகொள்கிறார்

1 mins read
சமூக நிர்வாக அனுபவங்களைப் பகிர மாநாடு வாய்ப்பளிக்கும்
3cce1769-2e18-4b69-b6ef-8b5a1b31bb75
சுகாதார அமைச்சர் ஓங் யி காங், கடந்த ஆண்டு ஜூன் மாதம் பொங்கோலில் நடந்த ஓர் மின்னிலக்க மாநாட்டில் சிறப்புரை ஆற்றுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் சுகாதார அமைச்சரும் சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஓங் யி காங் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) முதல் புதன்கிழமை (ஏப்ரல் 22) வரையில் சீனாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவரது வருகையின்போது, சீனாவின் ஹங்சூ மாநிலத்தில் நடைபெறும் ஐந்தாம் சிங்கப்பூர்-சீனா சமூக நிர்வாக மாநாட்டை அவர் இணைத் தலைமை தாங்கி வழிநடத்துவார் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு (எம்எஸ்எஃப்) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள ஒத்துழைப்பின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக அந்த மாநாடு விளங்குகிறது எனவும் அமைச்சு அறிக்கையில் குறிப்பிட்டது. சீனாவின் மத்திய அரசியல், சட்ட விவகார ஆணையத்தின் (பிஎல்ஏசி) செயலாளர் சென் வெங்கிங் உடன் இணைந்து திரு ஓங் மாநாட்டுக்குத் தலைமை ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டது. இருநாடுகளின் அதிகாரிகள் சமூக நிர்வாகம் பற்றிய அவர்களது அனுபவங்களைக் கருத்துப்பரிமாற்றம் செய்துகொள்ள மாநாடு வாய்ப்பளிக்கும் என்று அமைச்சு கூறியது.

“சர்ச்சைகளுக்குத் தீர்வுகண்டு நிலையான ஒருங்கிணைந்த சமூகங்களை உருவாக்குதல்” என்ற தலைப்பில் மாநாடு நடைபெறும்.

தேசிய பாதுகாப்புக்கும் உளவுத்துறைக்கும் பொறுப்பு வகிக்கும் திரு சென் மாநாட்டில் சிறப்புரை ஆற்றுவார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பிரிவின் உறுப்பினராகவும் அவர் பணியாற்றுகிறார்.

சிங்கப்பூர் சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி மாநாட்டில் கலந்துகொள்வதோடு கருப்பொருள் குறித்து உரையாற்றுவார்.

குறிப்புச் சொற்கள்
சீனாமாநாடுசமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுசுகாதார அமைச்சு