வெளிநாட்டு ஊழியர்கள் நோன்பு துறப்பதற்காக ரத்தின வணிகர் சங்கம் சிறப்பு ‘இஃப்தார்’ நிகழ்ச்சிக்கு மார்ச் 9ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்தது.
செம்பவாங் வட்டாரத்தில் உள்ள சிங்கப்பூரின் பழைமையான பள்ளிவாசல்களில் ஒன்றான ‘மஸ்ஜித் பெட்டம்பாட் மெலாயு செம்பவாங்’கில் இந்த நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
250க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியைச் சங்கத் தலைவர் ரஃபி அஹமது, செயலர் ஜெஹபர் ‘ஜிடிஏஎஸ்’ எனப்படும் சாதிக் ஆகியோருடன் உறுப்பினர்களும் வழிநடத்தினர்.
வரிசையில் அமர்ந்திருந்த அன்பர்கள், நாள் முழுவதும் நோன்பு நோற்ற பின்னர் இறைவனுக்கு நன்றி செலுத்தி, உணவருந்தி, கலந்துரையாடி மகிழ்ந்தனர்.
பள்ளிவாசலின் பொருளாளர் ஹாஜி கமால், இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ரத்தின வணிகர் சங்கத்திற்குத் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

