விளம்பரதாரர்களின் விவரங்களைச் சமூக ஊடகத் தளங்கள் உறுதி செய்ய வேண்டும்

விளம்பரதாரர்களின் விவரங்களைச் சமூக ஊடகத் தளங்கள் உறுதி செய்ய வேண்டும்

2 mins read
4cf49b40-6b23-4aed-b1f7-aa524e62561b
ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், டிக்டாக் ஆகியவையும் மோசடிகளுடன் தொடர்புடையவை எனச் சந்தேகிக்கப்படும் விளம்பரங்கள் தங்கள் தளங்களில் வெளியிடப்படுவதைத் தடுக்க வேண்டும். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

சிங்கப்பூரில் குற்றச் செயல்கள் மற்றும் மோசடிகளைத் தடுக்கும் நோக்கில், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், டிக்டாக் ஆகிய சமூக ஊடகத் தளங்களில் விளம்பரம் செய்வோரின் அடையாளங்களை அரசாங்க ஆவணங்கள் மூலம் கட்டாயமாகச் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் உரிமம் பெறாத நிதிச்சேவை நிறுவனங்களின் விளம்பரங்களை அவை தடை செய்ய வேண்டும். காவல்துறை ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதியன்று வெளியிட்ட புதிய சமூக ஊடகச் சேவை நடத்தை விதிகளின்படி, 2027ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிக்குள் இத்தளங்கள் இப்புதிய நடைமுறைகளைச் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதனை மீறினால், இணையக் குற்றவியல் தீங்குகள் சட்டத்தின்கீழ் குற்றமாகக் கருதப்பட்டு, $1 மில்லியன் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் 2025ஆம் ஆண்டில் பதிவான மொத்த மோசடிச் சம்பவங்களில் 30 விழுக்காடு சம்பவங்கள் இச்சமூக ஊடகத் தளங்கள் மூலம் நடந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் ஃபேஸ்புக் மூலம் மட்டுமே 18 விழுக்காடு மோசடிச் சம்பவங்கள் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட இணையச் செய்திப் பரிமாற்றச் செயலிகளுக்கான புதிய விதிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, அடையாளம் தெரியாத நபர்கள் தங்களை அனுமதி இன்றி குழுக்களில் சேர்ப்பதைத் தடுக்கும் வசதியையும் சந்தேகத்திற்குரிய எண்களிலிருந்து அழைப்புகள் வரும்போது எச்சரிக்கை செய்யும் வசதியையும் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதிக்குள் இச்செயலிகள் உருவாக்க வேண்டும்.

சமூக ஊடகத் தளங்கள் மூலம் நடக்கும் ஆள்மாற்றாட்ட மோசடி குறித்தும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

2025ஆம் ஆண்டில் இதுபோன்ற ஆள்மாறாட்ட மோசடிகளில் ஏறத்தாழ 18 விழுக்காடு சம்பவங்கள் வாட்ஸ்அப் மூலம் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கூகல் மீட் போன்ற தகவல் அனுப்பும் தளங்கள் மூலமாகவும் தனிப்பட்ட விவரங்களைத் திருடும் மோசடிகளில் மோசடிக்காரர்கள் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இணையம் வாயிலாகத் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை சிங்கப்பூர்வாசிகளில் 84 விழுக்காட்டினர் எதிர்கொண்டதாகத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு அண்மையில் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்