பிள்ளைகளின் பாதுகாப்புக்காகச் சமூக ஊடகங்கள் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்: பிரதமர் வோங்

பிள்ளைகளின் பாதுகாப்புக்காகச் சமூக ஊடகங்கள் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்: பிரதமர் வோங்

2 mins read
63406590-1ebf-429e-b495-db9482e84d79
சமூக ஊடகங்கள், இளையருக்கு வலுவான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருப்பது அவசியம் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் வலியுறுத்தினார்.  - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பிள்ளைகளின் நலனைப் பாதுகாக்கச் சமூக ஊடகங்கள் இன்னும் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.

அவை இணையத்தில் சுயமாக அறிவிக்கும் தகவல்கள் போதாது; வலுவான, நம்பத்தகுந்த சோதனை நடவடிக்கைகளைச் சமூக ஊடகங்கள் எடுக்கவேண்டும் என்றார் அவர்.

தேசிய தினப் பேரணியின் ஆங்கில உரையில் திரு வோங் அவ்வாறு தெரிவித்தார்.

குறைந்தபட்ச வயது முறையாக நிர்ணயிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் பிள்ளைகளின் பாதுகாப்பை அவை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சமூக ஊடகங்கள் புதிய வாய்ப்புகளை உருவாக்கின; குடும்பங்களையும் நண்பர்களையும் இணைத்தன; ஆனால் சில குறைபாடுகள் காலப்போக்கில்தான் தெளிவாகத் தெரியவந்தன என்று பிரதமர் கூறினார்.

சிங்கப்பூரில் 10 முதல் 24 வயது வரையிலான இளையரிடையே ஆறில் ஒருவரிடம் சமூக ஊடகப் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

பெரும்பாலான சமூக ஊடகங்கள், அவற்றை அணுகுவதற்கான குறைந்தபட்ச வயதை 13 என நிர்ணயித்துள்ளன. ஆனால் அதை நடைமுறைப்படுத்துவது கிட்டத்தட்ட அவற்றின் கையிலேயே உள்ளது.

பயனீட்டாளர்கள் குறிப்பிடும் வயதையே அவை பெரும்பாலும் நம்புகின்றன. ஆனால் அது சரியாக இல்லை என்பது தெரியும் என்றார் திரு வோங்.

சமூக ஊடகங்களால் 13 வயதை எட்டிய பதின்ம வயதினருக்குக்கூடப் பாதகமான விளைவுகள் ஏற்படலாம்; அதனால் வடிவமைப்பிலேயே சமூக ஊடகங்களைப் பாதுகாப்பானவையாக உருவாக்குவதற்கு உடனடி முன்னுரிமை அளிக்கப்படுவதாகப் பிரதமர் கூறினார்.

இளையருக்கு வலுவான பாதுகாப்பு அம்சங்களைச் சமூக ஊடகங்கள் கொண்டிருப்பது அவசியம்; போதுமான பாதுகாப்பு அம்சங்கள் இல்லையென்றால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றிப் பரிசீலிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் குறைந்தபட்ச வயதை 13க்கும் மேல் உயர்த்துவதும் அவற்றில் அடங்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்