சிங்கப்பூரில் அண்டைவீட்டாரிடையே ஏற்படும் இரைச்சல் தொடர்பான சச்சரவுகளைக் கையாளும் அரசாங்கப் பிரிவு, செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து அதன் சேவையைத் தீவெங்கும் உள்ள பேட்டைகளுக்கு விரிவுபடுத்துகிறது.
தெம்பனிஸ் வட்டாரத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்த முன்னோடித் திட்டத்தை அடுத்து அந்த முடிவு எடுக்கப்பட்டது.
சச்சரவுகளை நேரடியாகக் கையாள அரசாங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதால் சண்டையில் ஈடுபடும் அக்கம்பக்கத்தினர் சமரசப் பேச்சுவார்த்தைக்குச் செல்வது கட்டாயமாக்கப்படுகிறது.
புதிய மாற்றங்கள், வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கும் தனியார் வீடுகளுக்கும் பொருந்தும்.
அண்டைவீட்டாரிடையே எழும் சண்டைகளை விசாரிக்கவும் தேவைக்கு ஏற்ப உரிய அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசாங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குகிறது சமூக உறவுகள் பிரிவுத் திட்டம்.
2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தெம்பனிசில் கழக வீடுகள் உள்ள வட்டாரங்களில் அந்தத் திட்டம் முன்னோட்டமாகச் சோதிக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக வீடமைப்பு வளர்ச்சிக் கழக அதிகாரிகள், சண்டையில் ஈடுபடும் அண்டைவீட்டாரைக் கட்டாய சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி கூற முடிந்தது.
அந்தத் திட்டத்தைத் தற்போது தீவின் பிற பகுதிகளுக்கு விரிவுபடுத்துவதன் மூலம் அண்டைவீட்டாரிடையே எழும் சச்சரவுகள் ஆரம்பக் கட்டத்திலேயே சமரசப் பேச்சுவார்த்தைக்கு அனுப்பப்பட முடியும் என்று கலாசார, சமூக, இளையர்த் துறை அமைச்சு, சட்ட அமைச்சு, தேசிய வளர்ச்சி அமைச்சு ஆகியவை கூட்டறிக்கை ஒன்றை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) வெளியிட்டன.
பாதிக்கப்பட்ட அண்டைவீட்டாரிடமிருந்து வாக்குமூலங்களையும் குடியிருப்பாளர்களின் ஒப்புதலையும் பெற்று ஆதாரங்களைச் சேகரிக்க இரைச்சலைப் பதிவுசெய்யும் கருவிகளை வீடுகளில் சமூக உறவுகள் பிரிவு அதிகாரிகளால் பொருத்த முடியும்.
விசாரணையின் முடிவில் அதிகாரிகளால் ஆலோசனைக் கடிதங்களையும் எச்சரிக்கைகளையும் சம்பந்தப்பட்ட தரப்பிடம் வழங்க முடியும். எச்சரிக்கைகளுக்குச் செவிசாய்க்காத பட்சத்தில் அதிகாரிகளால் பொதுமக்களுக்குத் தொந்தரவு தரும் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான உத்தரவைப் பிறப்பிக்க முடியும்.
செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து கடுமையான இரைச்சலை ஏற்படுத்தும் அண்டைவீட்டார் மனநலப் பரிசோதனைக்கோ சிகிச்சைக்கோ செல்லும்படி சமூகச் சர்ச்சைத் தீர்வு மன்றங்கள் உத்தரவிடலாம்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இவ்வாண்டு ஜூலை மாதம் வரை சமூகச் சர்ச்சைத் தீர்வு மன்றங்களில் 299 புகார்கள் பதிவாகின. அவற்றுள் கிட்டத்தட்ட 85 விழுக்காடு இரைச்சல் தொடர்பானவை.
தெம்பனிஸ் வட்டாரத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இவ்வாண்டு ஜூலை மாதம் வரை 124 அண்டைவீட்டார் சர்ச்சை தொடர்பிலான புகார்கள் பதிவுசெய்யப்பட்டன. அவற்றுள் 87 இரைச்சல் தொடர்பானவை.


