தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேசிய தின அணிவகுப்பில் 40 அணிகளின் வீறுநடை

2 mins read
4c7e25b3-ed87-48e8-81c1-f590d4282e11
இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பில் கிட்டத்தட்ட 2,100 பேர் கலந்துகொண்டனர். - படம்: பே. கார்த்திகேயன்

இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பின் சடங்குபூர்வ அணிவகுப்பு அங்கம், 1990க்குப் பிறகு பாடாங் அரங்கில் நடைபெற்ற அணிவகுப்புகளில் ஆகப்பெரிது. இம்முறை மொத்தம் 40 அணிகள் பங்கேற்றன.

தேசிய தின அணிவகுப்புக் கொடியணி, ஆறு மரியாதை காவல் அணிகள், சீருடை அமைப்புகள், சமூக, பொருளியல் அமைப்புகள், இசைக்குழு, வாய்ப்பாட்டுக்குழு, அதிபருக்கான மரியாதை பீரங்கிக் குண்டு முழக்கம் உள்ளிட்ட பிரிவுகளிலிருந்து கிட்டத்தட்ட 2,100 பேர் அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, இம்முறை அணிவகுப்பின் மரியாதை காவல் அணியில் முதல்முறையாகக் கலந்துகொண்டது. 

அணிவகுப்பில் பங்கேற்ற வீரர்கள், சிங்கப்பூர்த் தற்காப்பு படையின் 60வது ஆண்டுநிறைவைக் குறிக்கும் சிறப்பு முத்திரைகளைச் சீருடையில் அணிந்திருந்தனர்.

மேலும், 10ஆம் ஆண்டுவிழாவைக் கொண்டாடும் சிங்கப்பூர் ஆயுதப்படையின் தொண்டூழியர் அணி முதல்முறையாக முழுமையான அணியாகப் பங்கேற்றது.

இதுவரை இல்லாத எண்ணிக்கையாக மொத்தம் 18 குடிமக்கள் அணிகள் அணிவகுப்பில் இடம்பெற்றன. அவற்றில், ‘ஷாப்பி’ நிறுவனத்தைப் பிரதிநிதிக்கும் அணி ஒன்றும் முதல்முறையாகக் கலந்துகொண்டது.

அணிகள் அரங்கில் கம்பீரமாக நடந்துசெல்லும்போது வண்ணமயமான சீருடைகள், மின்னும் பதக்கங்கள், பறக்கும் கொடிகள் அனைத்தும் நயமாய்க் கலந்தன.

அணிவகுப்பின் இறுதியில், சிங்கப்பூர் ஆயுதப்படை கொடியணி வழிநடத்த, கடற்படை, வான்படை, மின்னலக்க உளவுத்துறை, காவல்துறை, சிங்கப்பூரக் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றின் மரியாதை காவல் அணிகள் துல்லியமான அணிவகுப்பு நடைமுறையுடன் முன்னேறின.

100 உறுப்பினர்களைக் கொண்ட இசைக்குழு, நாட்டின் பல்வேறு மேடைகளிலிருந்து வந்த 127 பேர் கொண்ட வாய்ப்பாட்டுக் குழு, 21 பீரங்கிக் குண்டு முழக்கங்கள் அனைத்தும் அணிவகுப்புக்கு வீரியத்தையும் உற்சாகத்தையும் சேர்த்தன.

‘மாஜுலா சிங்கப்பூர்’ உணர்வில் பங்கேற்பாளர்களும் பார்வையாளர்களும் ஒன்றிணைந்து மகிழ்ந்த இவ்வாண்டு அணிவகுப்பில் ஒற்றுமை, தைரியம், முன்னேற்றம் ஆகிய பண்புகள் நினைவூட்டப்பட்டன.

குறிப்புச் சொற்கள்