தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீண்டகால சவால்களை எதிர்கொள்ள ஒற்றுமை அவசியம்: அதிபர் தர்மன்

3 mins read
3cc3ed4c-543c-489a-b210-577f91c5d49d
ஜே.ஒய். பிள்ளை, அதிபர் தர்மன், அவரின் துணைவியாருடன் சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகப் பேராளர்கள். - படம்: சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகம்

செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம், பருவநிலை மாற்றம், அதன் தாக்கம், விரைவாக மூப்படைந்து வரும் சமூகத்தில் நம்பிக்கை உருவாக்கம் உள்ளிட்ட உலகின் நீண்டகால சவால்கள் குறித்து புதன்கிழமை (நவம்பர் 27) ஜே.ஒய். பிள்ளை விரிவுரையில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.

அவற்றில் முதல் இரண்டு சவால்கள் முற்றிலுமாகக் கணிக்க முடியாதவை. கணிக்கக்கூடிய சவாலான, மூப்படையும் சமூகத்தில் நம்பிக்கை உருவாக்குவதற்கு முன்னரே தயாராகியிருக்க வேண்டும் என்ற அவர், அச்சவால்களை எதிர்கொள்ளும் வழிமுறைகளையும் குறிப்பிட்டார்.

சவால் எதுவாயினும் அவற்றைச் சந்தித்து, முன்னோக்கிச் செல்ல ஒற்றுமை உணர்வு அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஜே.ஒய். பிள்ளை விரிவுரைத் தொடரைத் தொடங்கி வைத்து (Inaugural JY Pillay Public Lecture Series on Governance) முதல் விரிவுரையை ஆற்றினார் அதிபர் தர்மன்.

ஜே.ஒய். பிள்ளை  விரிவுரைத் தொடரில் முதல் உரையாற்றிய அதிபர் தர்மன்.
ஜே.ஒய். பிள்ளை  விரிவுரைத் தொடரில் முதல் உரையாற்றிய அதிபர் தர்மன். - படம்: சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகம்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முதல் தலைவராக அந்நிறுவனத்தை பெருக்கி, உலகளவில் சிறந்த நிறுவனமாக்கியதிலும், நிதித்துறை வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றியவரான திரு ஜே.ஒய். பிள்ளையைப் பெருமைப்படுத்தும் விதமாக அவரது பெயரில் இந்த விரிவுரைத் தொடர் தொடங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத் தலைவர் மில்ட்ரெட் டானின் தொடக்க உரையைத் தொடர்ந்து பேசிய அதிபர், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள, அதன் சரியான தாக்கத்தை உணர்ந்து விரைவாக உரிய பசுமைத் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று சொன்னார்.

அத்தொழில்நுட்பங்களின் அதிகரிப்பு, வளர்ச்சி, வேலை உருவாக்கம், வணிக மேம்பாட்டிற்கான சிறந்த வாய்ப்பு என்றும் தெரிவித்தார்.

அத்துறையில் தனியார் முதலீடுகளும் பொதுக் கொள்கைக் கட்டமைப்பும் அவசியம் என்றும் குறிப்பிட்ட அதிபர், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலகநாடுகள் ஒண்றிணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டினார்.

அவற்றை எதிர்கொள்ள தற்போதாகும் செலவுகள் எதிர்காலத்திலும் பலனளிக்கும் எனும் நம்பிக்கை வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதிபருடன் பேராசிரியர் டான் தை யோங் (Tan Tai Yong)
அதிபருடன் பேராசிரியர் டான் தை யோங் (Tan Tai Yong) - படம்: சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகம்

“செயற்கை நுண்ணறிவு சக்திவாய்ந்த கண்டுபிடிப்பு. அதிலுள்ள அபாயங்களும் குறிப்பிடத்தக்கவை. அதனை நெறிமுறைப்படுத்தும் வழிகளைத் தாமதிக்கக்கூடாது. அதேநேரத்தில் சுகாதாரம், வேளாண்மை, உற்பத்தித்திறன் அதிகரிப்பு என அத்தொழில்நுட்பத்தின் நேர்மறைத் தாக்கங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்றார் திரு தர்மன்.

“மூப்படையும் சமூகத்தில் சுகாதார மேம்பாடு ஆயுட்காலத்தை அதிகரித்துள்ளது. அது திருப்தியாகவும் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் அமைய, குறைந்த செலவில் தரமான மருத்துவத்தை உறுதி செய்ய வேண்டும்,” என்றார். சுகாதாரச் செலவுகளை ஈடுசெய்ய தனிநபரின் பங்களிப்பு, அரசாங்க மானியம், காப்புறுதி உள்ளிட்டவை அவசியம் என்று குறிப்பிட்டார் அதிபர் தர்மன்.

“சமூகமாகச் சந்திக்கும் சவால்கள், நம்பிக்கையை வலுவாக்கும் வாய்ப்புகள். அவற்றின் தாக்கங்களை உணர்ந்து அதனை எதிர்கொள்ள நம்பிக்கையும் ஒற்றுமையுமே வழி,” என்றார் அவர்.

ஜே.ஒய். பிள்ளை

சமூகத்திற்கு ஜே.ஒய். பிள்ளை ஆற்றிய பங்கையும் அவரது அர்ப்பணிப்பையும் கொண்டாடும் நோக்கில் அவரது பெயரில் விரிவுரைத் தொடர் இடம்பெறுகிறது. வலுவான நிர்வாகத்தின் மீது கட்டமைக்கப்பட்ட சமூகம் வெற்றியடையும் என்பதை உணர்த்தியவர் ஜே.ஒய். பிள்ளை. வரும் அமர்வுகளில் மேலும் பல அறிஞர்கள் உரையாற்ற உள்ளனர்.

நிதி, தற்காப்பு, தேசிய வளர்ச்சி அமைச்சுகளில் நிரந்தரச் செயலாளராகவும் அதிபர் ஆலோசனை மன்றத்தில் அதிக காலம் சேவையாற்றியவருமான திரு ஜே.ஒய். பிள்ளையின் பங்களிப்பைப் போற்றும் வகையில் புரவலர் சியே ஃபூ ஹுவா, திரு பிள்ளையின் நண்பர்கள் $600,000 நிதியளித்து இந்தத் தொடரைச் சாத்தியமாக்கியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்