புகைமூட்டம் காரணமாக ஊழியர்களுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கவும் வேலைத் தாமதங்களுக்கான இழப்பீடு கோரவும் தேவையான நடவடிக்கைகளைச் சிங்கப்பூர் கட்டுமான நிறுவனங்கள் எடுத்து வருகின்றன.
கடந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் சிங்கப்பூரின் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலை எனச் சொல்லப்படும் 101 முதல் 200 வரையிலான அளவை எட்டியது.
அதனையடுத்து, பல கட்டுமானத் திட்டங்களின் பணிகள் தாமதமடைந்து வருவதாகக் கட்டுமானத்துறைக்குச் சட்ட ஆலோசனை வழங்கும் வழக்கறிஞர் கெல்வின் ஆவ் சுட்டிக்காட்டினார்.
மேலும், வெளிப்புற வேலை நேரத்தைக் குறைத்தல், பார்வைத் தெளிவு குறைவாக இருக்கும்போது பாரந்தூக்கி இயக்குவதைத் தவிர்த்தல், தங்குமிடத்தில் கூடுதல் ஓய்வு நேரம் வழங்குவது போன்ற மாற்றங்களை நிறுவனங்கள் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்க ஊழியர்களைக் கட்டடங்களுக்குள் வேலை செய்யுமாறு நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஊழியர்களைப் புகைமூட்டத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு நீர் விநியோக நிலையங்கள், விசிறிகள், தற்காலிக நிழற்குடைகள் ஆகியவற்றை ‘காஜிமா ஓவர்சீஸ் ஏஷியா’ நிறுவனம் அமைத்துள்ளது.
ஊழியர்களின் உடல்நிலையைக் கண்காணித்து வருவதுடன், உடல்நலக் குறைபாடு உள்ள ஊழியர்களை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிக்கத் தேவையான நடவடிக்கையையும் அது மேற்கொண்டு வருகிறது.
இதன் காரணமாக, பொதுத்துறையைச் சேர்ந்த இரு முக்கியத் திட்டங்களின் பணிகள் மெதுவாக நடந்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
அதேபோல ‘ஹை-டெக் கன்ஸ்ட்ரக்ஷன்’ நிறுவனமும் வெளிவேலைகளைக் குறைத்து, ஊழியர்களின் உடல்நிலையைத் தினமும் மூன்று முறை கண்காணித்து வருகிறது.
சிங்கப்பூரில் இந்த ஆண்டில் இதுவரை கிட்டத்தட்ட ஆறு வாரங்களாகப் புகைமூட்டம் நிலவுகிறது.
அக்டோபர் மாதத்தின் சில நாட்களில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 201 முதல் 300 வரையிலான மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை அடைந்தது.
2023ஆம் ஆண்டில், கட்டட, கட்டுமான ஆணையம் புகைமூட்டத்தினால் ஏற்படும் வேலைத் தாமதங்களுக்கு எவ்வாறு நிறுவனங்கள் கூடுதல் கால அவகாசம் பெறலாம் என்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
அதன்படி, காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 200க்கும் மேல் என்ற நிலையில் குறைந்தது மூன்று மணி நேரம் நீடித்தால் அரை நாள் அவகாசமும் ஐந்து மணி நேரத்திற்கு மேல் நீடித்தால் ஒரு நாள் அவகாசமும் கோர முடியும்.
எனினும், இதற்கு நிறுவனங்கள் தங்களின் உற்பத்தித்திறன் பாதிக்கப்பட்டதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்.
இந்நிலையில், பருவநிலை மாற்றத்தால் நிலவும் மாறுபட்ட வானிலையைக் கருத்தில்கொண்டு, வேலைத் தாமதங்களை மதிப்பிடுவதற்கான தெளிவான வழிகாட்டுதல்களை அரசாங்க நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்க விரும்புவதாகச் சிங்கப்பூர் ஒப்பந்ததாரர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
