முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பதக்கங்கள் கெரோசல் தளத்தில்

முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பதக்கங்கள் கெரோசல் தளத்தில்

2 mins read
68a274fe-d447-4cd3-ae43-acf2ab257105
கொவிட்-19 தொடர்பில் வழங்கப்பட்ட மீள்திறன் பதக்கங்கள் கெரோசல் தளத்தில் விற்கப்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - படம்: கெரோசல்

கொவிட்-19 கொள்ளைநோயை எதிர்த்துப் போராடிய முன்களப் பணியாளர்களைச் சிறப்பித்து அரசாங்கம் அவர்களுக்கு வழங்கிய மீள்திறன் பதக்கங்களைப் பலர் இணையத்தில் விற்பனை செய்வதாகத் தெரியவந்துள்ளது.

தங்களின் சேவையை கௌரவித்து வழங்கப்பட்ட அந்தப் பதக்கங்களை, வாங்கிய சில மாதங்களிலேயே அவர்கள் விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது.

கொவிட்-19 மீள்திறன் பதக்கத்தைக் குறைந்தது அறுவர் ‘கெரோசல்’ இணைய விற்பனைத்தளத்தில் விளம்பரம் செய்திருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டறிந்தது.

பதக்கங்கள் 380 வெள்ளிக்கும் 1 மில்லியன் வெள்ளிக்கும் இடைப்பட்ட விலையில் விற்கப்படுவதாகவும் அறியப்படுகிறது.

தனது பதக்கத்தை 1,500 வெள்ளிக்கு விளம்பரம் செய்திருந்த ஒருவர், தனக்கு டிசம்பர் 11ஆம் தேதியிலிருந்தே அதை வாங்கப் பலர் விருப்பம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார். 1,300 வெள்ளி வரை ஒருவர் கட்டத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பதக்கத்தை 380 வெள்ளிக்கு விற்பனை செய்ய விளம்பரம் செய்திருந்த ஒருவரிடம் இதற்காகக் காரணம் கேட்டபோது தனக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

“கொவிட்-19 கொள்ளைநோய்க்கு எதிரான சிங்கப்பூரின் போராட்டத்தில் பங்களித்த பொதுத் துறை, தனியார் துறை, மக்கள்சார்ந்த துறை ஆகியவற்றைச் சேர்ந்த நபர்களையும் குழுக்களையும் அங்கீகரிக்க கொவிட்-19 மீள்திறன் பதக்கங்கள் தேசிய விருதுகளாக வழங்கப்பட்டன,” எனப் பிரதமர் அலுவலகப் பேச்சாளர் தெரிவித்தார்.

“அந்தப் பதக்கங்கள் வழங்கப்பட்டதன் சிறப்பை உணர்ந்து தகுந்த மதிப்பளித்திட வேண்டும்,” என அவர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 மீள்திறன் பதக்கமும் கொவிட்-19 மீள்திறன் சான்றிதழும் இவ்வாண்டு 100,000க்கும் அதிகமான நபர்களுக்கும் குழுக்களுக்கும் வழங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்