மைக்ரோசாஃப்ட் சேவைத் தடை காரணமாக சிங்கப்பூரில் அரசாங்க அமைப்புகள், முக்கிய வங்கிகள், நீதிமன்றங்கள் ஆகியவற்றின் சில மின்னஞ்சல் சேவைகள் வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) பாதிக்கப்பட்டன.
உலக அளவில் ஆயிரக்கணக்கான பயனர்கள் மைக்ரோசாஃப்ட் சேவைத் தடையால் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்தச் சூழல் உருவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட அரசாங்க அமைப்புகளின் முறைகளை வழக்கநிலைக்குத் திரும்பச் செய்ய தாங்கள் மைக்ரோசாஃப்ட்டுடன் இணைந்து செயல்பட்டுவருவதாக ‘கவ்டெக்’ அமைப்பு வெள்ளிக்கிழமை ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தது.
அரசாங்கத் துறை
அரசாங்க ஊழியர்கள் தங்களுக்குள் மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் தளங்களைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். ஆனால், மின்னஞ்சல் சேவைகளுக்கு ஏற்பட்ட இடையூறுகளால் பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பது தாமதமடையலாம் என்று கவ்டெக் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
அவசர சேவைகள் தொடர்ந்து முழுச் செயல்பாட்டில் உள்ளன. அவற்றுக்கு என்றும்போல் 995, 999 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். அவசர விவகாரங்களுக்குச் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் அழைப்பு நிலையங்களைத் தொடர்புகொள்ளுமாறும் மின்சேவைகள் குறித்த விவரங்களுக்கு அவற்றின் சமூக ஊடகத் தளங்களுக்குச் செல்லுமாறும் கவ்டெக், பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.
மேல்விவரங்கள் கிடைக்கும்போது தகவல்கள் வழங்கப்படும் என்று அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.
மின்னஞ்சல் அனுப்புவது தொடர்பில் சிக்கல்கள் காணப்படுவதை சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் வரி செலுத்துபவர்களுக்கு எக்ஸ் தளத்தில் தனது கணக்கின்வழி தெரியப்படுத்தியது. மைடேக்ஸ் தளம், லைவ் சேட் ஆகியவற்றைப் பயன்படுத்துமாறு ஆணையம் பயனர்களைக் கேட்டுக்கொண்டது.
குடிநுழைவுச் சேவைகள்
எஸ்ஜி வருகையாளர் அட்டைச் சேவை பாதிக்கப்படவில்லை என்று சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் உறுதிப்படுத்தியது. எனினும், ஃபோர்ம்எஸ்ஜி மூலம் இடம்பெற்ற சில நடவடிக்கைகளுக்கான பதில் நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என்று ஆணையம் குறிப்பிட்டது.
யுஓபி, மேபேங்க் போன்ற வங்கிகளும் தங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தன.
வெள்ளிக்கிழமை பிற்பகல் மூன்று மணி நிலவரப்படி மைக்ரோசாஃப்ட் சேவைகளில் தொடர்ந்து இடையூறுகள் இருக்கின்றன. சிங்கப்பூர் நேரப்படி காலை 9.10 மணியளவில் டெளன்டிட்டெக்டர் தளத்தில் மைக்ரோசாஃப்ட் சேவை இடையூறு தொடர்பான புகார்கள் ஆக அதிகமாக 1,128ஆகப் பதிவாயின. பிறகு பிற்பகல் 2.10 மணிக்கு அந்த எண்ணிக்கை 679ஆகக் குறைந்தது.
