சிங்கப்பூரிலுள்ள ஒன்பது தனியார் மருத்துவமனைகள் அனைத்துமே முன்னதாக எதிர்பார்த்தபடி 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் தங்களது நோயாளிகளின் உடல்நல விவரங்களைத் தேசிய சுகாதார மின் பதிவேட்டிடம் சமர்ப்பிக்காது.
தனியார் மருத்துவமனைகளான தாம்சன் மருத்துவ நிலையம், மவுண்ட் அல்வெர்னியா மருத்துவமனையும் இதன் தொடர்பில் தாமதத்தை எதிர்நோக்குவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தன.
தற்போதுள்ள தங்களது சுகாதார மின் பதிவுக்கான கட்டமைப்புகளில் உள்ள தரவுத்தளங்களைத் தேசிய சுகாதாரப் பதிவேட்டுக்கு (NEHR) ஏற்ப மாற்றுவதில் சவால்கள் இருப்பதாக மருத்துவமனைகள் குறிப்பிட்டன.
நோயறிதல், மருந்து முறை, ஒவ்வாமைகள், ஆய்வறிக்கைகள் போன்ற முக்கிய சுகாதாரத் தரவுகளுக்கான மையக் களஞ்சியமாக, 2011ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பதிவேடு செயல்படுகிறது.
இந்தப் பதிவேட்டின் காரணமாக, நோயாளிகள் வெவ்வேறு மருத்துவச் சேவை வழங்குநர்களை அணுகும்போது மருத்துவப் பரிசோதனைகளை மீண்டும் செய்யவோ, காகித மருத்துவ அறிக்கைகளை எடுத்துச் செல்லவோ தேவையில்லை.
மையக் களஞ்சியம் ஒன்று இருப்பதால், நோயாளிகளுக்கு ஒவ்வாமை உள்ள மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அபாயமும் குறைகிறது. இதனால் நேரம் மிச்சமாவதோடு, மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்காகச் சிறந்த, விரைவான முடிவுகளை எடுக்க முடியும்.
இந்நாட்டின் 90% அவசர மருத்துவமனைப் பணிகளைக் கையாளும் பொது மருத்துவமனைகள், 2011ஆம் ஆண்டு முதல் மின்பதிவேட்டைப் பயன்படுத்தி வருகின்றன.
பல்மருத்துவமனைகள், பொது மருந்தகங்கள் போன்ற ஆரம்ப சுகாதாரச் சேவை வழங்குநர்களும், ஹெல்தியர் எஸ்ஜி (Healthier SG) திட்டத்தின்கீழ் படிப்படியாக இதில் இணைந்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
தனியார் சுகாதாரச் சேவை வழங்குநர்களின் பங்கேற்பு இதுவரை விருப்பத்தின் பேரில் இருந்தபோதும் இனி இது மாற உள்ளது.
சேவை வழங்குநர்களை மின்பதிவேட்டில் சேர சுகாதாரத் தகவல் மசோதா மூலம் கட்டாயமாக்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.
2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருந்த இந்த மசோதா, தாமதம் கண்டுள்ளது.
சிங்கப்பூரிலுள்ள ஒன்பது தனியார் மருத்துவமனைகளும் 2025 இறுதிக்குள் நோயாளிகளின் சுகாதாரத் தகவல்களை பதிவேட்டுக்கு வழங்குவதாக நவம்பர் 2024ல் கூறின.