ஏறத்தாழ 500,000 பேருக்கு அவர்களின் வரி ஆவணங்களை சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் (ஐராஸ்) நேரடியாக அனுப்பவுள்ளது.
இந்த நிதியாண்டில் முதன்முறையாக சுயதொழில் செய்வோர் சிலர் இந்த ஏற்பாட்டால் பலனடையவிருக்கின்றனர்.
வரி செலுத்துவோர், மார்ச் மாத நடுப்பகுதியிலிருந்து தங்களின் வருமான விவரங்களை உள்ளடக்கிய ஆவணங்களைப் பெறுவர். அதோடு, அவர்கள் பெறும் வரி நிவாரணம் குறித்த விவரங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
நேரடி மதிப்பீட்டு அறிக்கை (Direct Notice of Assessment) திட்டத்தின்கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இத்திட்டம் இப்போது சுயதொழில் செய்வோருக்கும் நீட்டிக்கப்படுவதாக ஐராஸ் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) தெரிவித்தது. வரும் ஆண்டுகளில் பெரும்பாலான வரி செலுத்துவோருக்கும் ஐராஸ் இத்திட்டத்தை நீட்டிக்க உள்ளது.
வரி ஆவணங்களை நேரடியாகப் பெறவுள்ள சுமார் 500,000 வரி செலுத்துவோர், படிவத் தாக்கல் இல்லாத (no-filing service) வரிச் சேவைக்குத் தகுதிபெறும் 1.9 மில்லியனுக்கும் அதிகமான தனிநபர்களில் அடங்குவர். இவர்கள் தங்களுக்கான வரி விவரங்களைத் தாங்களே தாக்கல் செய்ய வேண்டியதில்லை.
வரி ஆவணங்கள் தங்களுக்கு நேரடியாக வழங்கப்படுமா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புவோர் myTax தளத்தின் தகவல் அங்கத்துக்குச் (notification centre) சென்று தெரிந்துகொள்ளலாம். வரி ஆவணம் அனுப்பப்பட்டு 30 நாள்களுக்குள் மாற்றங்கள் செய்யலாம்.
வரி செலுத்துவோர், கடந்த ஆண்டில் ஈட்டிய வருமானத்தில் 60 விழுக்காடு வரிக் கழிவு பெறுவர். அதிகபட்சமாக 200 வெள்ளி வரிக் கழிவு வழங்கப்படும்.
கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதியன்று பிரதமர் லாரன்ஸ் வோங்கின் வரவுசெலவுத் திட்ட உரையில் தெரிவிக்கப்பட்டதற்கு ஏற்றவாறு இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
வரி செலுத்துவோரைச் சார்ந்திருப்போரைக் கருத்தில்கொண்டு ஆண்டுதோறும் வழங்கப்படும் வரி நிவாரணத்திலும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு அத்தகைய வரி நிவாரணத்திற்கான அதிகபட்ச வருமானம் 4,000லிருந்து 8,000 வெள்ளிக்கு உயர்த்தப்படுகிறது.

