சிங்கப்பூரில் சளிக்காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை பெருகி வருவது சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களிடையே கவலையை ஏற்படுத்தி இரப்பதாக சிஎன்ஏ தெரிவித்தள்ளது.
சில மருந்தகங்களில் பதிவாகும் சளிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த இரு வாரங்களில் பத்து மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.
அண்மைக் காலமாக பருவநிலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் சளிக்காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று சிஎன்ஏவிடம் பேசிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தேவையான தடுப்பூசி போட்டுக்கொள்வது, முக்கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கத் தவறுவதும் சளிக்காய்ச்சல் அதிகம் பரவக் காரணமாக அமையலாம் என்பது அவர்களின் கருத்து.
சுகாதார முன்னெச்சரிக்கை பழக்கவழக்கங்கள் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த உதவும் என்கின்றனர் அவர்கள்.
கிங்ஸ்வே மெடிகல் கிளினிக் மருந்தகம் வாரம் ஒன்றுக்கு ஐந்து முதல் 10 சளிக்காய்ச்சல் நோயாளிகளைச் சந்திப்பது வழக்கம். ஆனால். கடந்த இரு வாரங்களாக அந்த எண்ணிக்கை 50க்கு மேல் அதிகரித்துவிட்டதாக அது தெரிவித்துள்ளது.
இந்தத் திடீர் அதிகரிப்பு எதிர்பாராதது என்று அதன் மருத்துவர்களில் ஒருவர் கூறியுள்ளார்.
கொவிட்-19 பெருந்ததொற்று அபாயம் குறைந்துவிட்டதால் பலரும் சளிக்காய்ச்சலுக்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதில்லை என்றார் டாக்டர் ஸாங் குயி.
தொடர்புடைய செய்திகள்
“முகக்கவசம் அணியாமலும் கைகளை அவ்வப்போது கழுவாமலும் கவனக்குறைவுடன் இருந்தால் கிருமிகள் வேகமாகப் பரவும்,” என்று அவர் சிஎன்ஏ செய்தியாளரிடம் கூறினார். ‘டாக்டர் எனிவேர்’ என்னும் மருந்தகத்திலும் இதேபோன்ற நிலவரம் காணப்பட்டது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சளிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை 40 விழுக்காடு வரை அதிகரித்ததாக அந்த மருந்தகம் கூறியுள்ளது.
சளிக்காய்ச்சலுடனும் அதிக காய்ச்சலுடனும் வருவோரில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்றும் அது தெரிவித்துள்ளது.
“மழைக்காலங்களில் நாம் அதிகமாக உள்ளரங்கக் கூடங்களுக்குச் செல்வதுண்டு. அதுபோன்ற வேளைகளில் கூட்டமும் மனிதரோடு மனிதர் தொடர்புகொள்வதும் அதிகமாக இருக்கும்,” என்று கூறிய ‘டாக்டர் எனிவேர்’ மருந்தக மருத்துவர் கோ ரெயார், முகக்கவசம் அணிவது போன்ற கொவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பெரும்பாலும் குறைந்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.