யூனோஸ் வட்டாரத்தில் உள்ள பாலர்பள்ளி ஒன்றில் கிட்டத்தட்ட 16 மாணவர்களிடம் கடந்த புதன்கிழமை (மார்ச் 11) நச்சுணவு உட்கொண்டதற்கான அறிகுறிகள் தென்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூனோசில் உள்ள ‘மேப்பல்பேர் கிட்ஸ் அட்வெஞ்சர் பிளேஸ்’ பாலர்பள்ளியில் புதன்கிழமை உணவு உட்கொண்ட பிறகு 16 மாணவர்களிடம் நச்சுணவு உட்கொண்டதற்கான அறிகுறிகள் தென்பட்டதைத் தாங்கள் அறிவதாக சேட்ஸ் கேட்டரிங் உணவு விநியோக நிறுவனம் தெரிவித்தது. அந்நிறுவனம் சம்பந்தப்பட்ட பாலர்பள்ளிக்கு உணவு விநியோகித்து வருகிறது.
புதன்கிழமை 96 மதிய உணவுப் பொட்டலங்களை அப்பள்ளிக்கு விநியோகித்ததாக சேட்ஸ் கேட்டரிங் தெரிவித்தது. இவை, அதே நாளில் மற்ற பள்ளிகளுக்காகவும் தயார்செய்யப்பட்ட மொத்தம் 2,188 உணவுப் பொட்டலங்களில் அடங்கும் என்றும் அது குறிப்பிட்டது.
“இதுவரை பிரச்சினை எதுவும் இருப்பதாகவும் மற்றப் பள்ளிகளிலிருந்து புகார் வரவில்லை,” என்று சேட்ஸ் கூறியது.
“அன்றைய தினம் மேப்பல்பேர் யூனோசில் சேட்ஸ் வழங்கிய உணவைத் தவிர மாணவர்கள் மாலை நேரத்தில் ‘சீஸ் சேண்ட்விச்’ போன்ற சிற்றுண்டி வகைகளையும் உண்டனர் என்று நாங்கள் அறிகிறோம்,” என்றும் அந்நிறுவனம் விவரித்தது.
உயரிய உணவுப் பாதுகாப்புத் தரநிலைகளுக்கு ஏற்றவாறு உணவைத் திட்டமிட்டு, தயார்செய்து, விநியோகிப்பதாக சேட்ஸ் விளக்கமளித்தது. புதன்கிழமை தாங்கள் விநியோகித்த எல்லா உணவிலிருந்தும் சோதனை செய்ய மாதிரிகளைச் சேகரித்திருப்பதாகவும் அது தெரிவித்தது.
தாங்கள் நடத்தும் வகுப்புகளின் ஒன்றைச் சேர்ந்த எட்டுச் சிறார் நச்சுணவு உட்கொண்ட பாதிப்புக்கு ஆளானதாக மேப்பல்பேர் யூனோஸ் வியாழக்கிழமை (மார்ச் 12) பெற்றோருக்கு அனுப்பிய குறிப்பில் தெரிவித்தது. அந்தக் குறிப்பை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பார்த்திருக்கிறது.
அதோடு, ஏழு சிறாரும் ஆசிரியர்கள் இருவரும் இரைப்பைக் குடல் அழற்சிக்கு (stomach flu) ஆளானதாக அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
மேலும் நால்வரின் நிலை குறித்து மருத்துவர்கள் இன்னும் தெரிவிக்கவில்லை என்று மேப்பல்பேர் யூனோஸ் தன் குறிப்பில் கூறியது.

