வெளிப்புற நிகழ்ச்சிகளில் திளைக்கவும் பசுமையான புல்வெளியில் நண்பர்களுடன் அமர்ந்து நேரம் செலவிடவும் மேம்படுத்தப்பட்ட ‘சமர்செட் பெல்ட்’ பகுதி இளையோருக்கு வாய்ப்பளிக்கும்.
‘*ஸ்கேப்’ என்ற இளையருக்கான நடுவம் தொடங்கி ‘டிரைஃபெக்டா’ என்ற விளையாட்டுப் பகுதிவரை நீண்டுள்ள ‘சமர்செட் பெல்ட்’ 2027ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து கட்டங்கட்டமாகத் திறக்கப்படும்.
இந்தப் பகுதிக்கான கட்டுமானப் பணிகள் 2028ஆம் ஆண்டுக்குள் முழுமையாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேம்பாட்டுப் பணிகள் அதிகாரபூர்வாகத் திங்கட்கிழமை (நவம்பர் 16) தொடங்கின. கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் டேவிட் நியோ உட்பட பிற பிரதிநிதிகள் சமர்செட் இளையர் பூங்காவில் நடைபெற்ற நிலந்திருத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சால் நிர்வகிக்கப்படும் மேம்படுத்தப்பட்ட பகுதியிலும் *ஸ்கேப் பகுதியிலும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட நான்கு இடங்கள் இருக்கும்.
அவற்றுள் முதலாவது சமர்செட் இளையர் பூங்கா. நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் இளையரின் கலைப்படைப்புகளைக் காட்சிப்படுத்தவும் இளையோர் அந்த இடத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பூங்காவிற்கு அருகில் இன்கியூபேஷன் நெக்சஸ் என்ற இடம் அமைந்திருக்கும். இளையர் தங்கள் யோசனைகளை அங்குப் பகிர்ந்துகொண்டு தொழில்முனைப்புக்கான திட்டங்களை ஆராயலாம்.
பயிலரங்குகள், சமூக நடவடிக்கைகள், உணவு, பானங்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் அங்கிருக்கும்.
தற்போதிருக்கும் வெளிப்புற சமர்செட் சறுக்குப் பூங்கா, கூரைவேய்ந்த இடமாகவும் வெளிப்புற சறுக்குப் பகுதிகளையும் கொண்டிருக்கும்.
ஸ்கேட் பூங்காவிற்கும் 111 சமர்செட் கடைத்தொகுதிக்கும் இடையில் சமர்செட் சிலோப்ஸ் என்ற இயற்கை வளாகம் அமைந்திருக்கும்.
நிலந்திருத்தும் பகுதியில் பேசிய திரு நியோ, இளையர் தங்களுக்குரிய இடம் எப்படி இருக்கவேண்டும் என்பதைத் தெளிவாக முன்வைத்துள்ளனர் என்றார்.
ஐந்தில் மூன்று இளையர், இத்தகைய இடங்கள் வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்தோருக்குப் பல வாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்று குறிப்பிட்டனர்.
