தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்கிழக்காசியா, வளைகுடா வட்டாரங்கள் அணுக்கமாக செயல்படவேண்டும்: பிரதமர் வோங்

3 mins read
984ba474-b840-4e24-a3ad-f9b7c74c8c4a
மலேசியாவின் கோலாலம்பூரில் ஆசியான்-ஜிசிசி-சீனா உச்சநிலை மாநாடு முதல்முறையாக நடைபெற்றது.   - படம்: சாவ் பாவ்
multi-img1 of 2

பதற்றமான உலகச் சூழலில் ஆசியானும் வளைகுடா ஒத்துழைப்பு மன்றமும் (ஜிசிசி) உறவுகளை மேலும் வலுப்படுத்தி இரு வட்டாரங்களின் பலத்தைத் தன்வசப்படுத்தி பலனடையவேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

பத்து தென்கிழக்காசிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஆசியானும் பஹ்ரேன், குவைத், ஓமான், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளை இணைக்கும் வட்டார அமைப்பான ஜிசிசியும் துடிப்புமிக்க இரு வட்டாரங்கள் என்று குறிப்பிட்ட திரு வோங், இரு வட்டாரங்களும் இன்னும் அதிகமாகவும் அணுக்கமாகவும் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மலேசியாவின் கோலாலம்பூரில் நடந்த 2வது ஆசியான்-ஜிசிசி உச்சநிலை மாநாட்டில் திரு வோங் பேசினார்.

மலேசியாவின் கோலாலம்பூரில் 2வது ஆசியான்-ஜிசிசி உச்சநிலை மாநாடு நடைபெற்றது.
மலேசியாவின் கோலாலம்பூரில் 2வது ஆசியான்-ஜிசிசி உச்சநிலை மாநாடு நடைபெற்றது. - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

இரு வட்டார அமைப்புகளுக்கிடையில் 2023ல் முதல் உச்சநிலை மாநாடு நடைபெற்றது. அதில் ஏற்கப்பட்ட ஒத்துழைப்புக் கட்டமைப்பால் உறவுகள் மேம்பட்டுள்ளதைச் சுட்டிய பிரதமர், அதை அரவணைத்து இன்னும் அணுக்கமாகச் செயல்பட மூன்று அம்சங்களை சுட்டிக்காட்டினார்.

ஜிசிசியுடன் தடையற்ற வர்த்தக உடன்பாட்டை செய்துகொண்ட மத்திய கிழக்கில் இல்லாத முதல் நாடு சிங்கப்பூர் என்பதைக் குறிப்பிட்ட அவர், அதை அடிப்படையாகக் கொண்டு ஆசியானும் ஜிசிசியும் அத்தகைய உடன்பாட்டைச் செய்தால் இரு வட்டாரங்களுக்கிடையில் வரிகள் குறைக்கப்பட்டு, விநியோகத் தொடர் வலுப்பட்டு, உணவுப் பாதுகாப்பு மேம்பட்டு, முதலீடுகள் அதிகரிக்கும் என்று எடுத்துரைத்தார்.

ஆர்சிஇபி எனும் முழுமையான வட்டாரப் பொருளியல் பங்காளித்துவத்துடன் ஜிசிசி ஒத்துழைப்பை ஆராயவேண்டும் என்று திரு வோங் கேட்டுக்கொண்டார்.

ஆசியானின் பத்து உறுப்பு நாடுகளூடன் சேர்த்து சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 15 ஆசிய-பசிபிக் நாடுகளை உள்ளடக்கிய பொருளியல் உடன்பாடு ஆர்சிஇபி. 2022ல் அது செயல்பாட்டுக்கு வந்தது.

இந்த இருதரப்புக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக உடன்பாடு சிக்கலானது என்று ஒப்புக்கொண்ட திரு வோங், உலக உள்நாட்டு உற்பத்தியில் 35 விழுக்காட்டை இந்த இருதரப்பும் கொண்டிருப்பதாகவும் அது கணிசமான அளவு என்றும் குறிப்பிட்டார்.

மலேசியாவின் கோலாலம்பூரில் நடந்த 2வது ஆசியான்-ஜிசிசி உச்சநிலை மாநாட்டில் திரு வோங் பேசினார்.
மலேசியாவின் கோலாலம்பூரில் நடந்த 2வது ஆசியான்-ஜிசிசி உச்சநிலை மாநாட்டில் திரு வோங் பேசினார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

இருதரப்பும் அதிகாரபூர்வமாகப் பங்காளித்துவத்தில் ஈடுபட்டால் அதிகமான வர்த்தகத்தையும் முதலீடுகளையும் காண்பதுடன் சட்ட அடிப்படையிலான வர்த்தக முறையை நிலைநாட்ட முடியும் என்றார்.

எரிசக்தி உருமாற்றத்திலும் மின்னிலக்கப் பொருளியலிலும் இரு வட்டாரங்கள் ஏராளமான வழிகளில் இணைந்து செயல்படலாம் என்று திரு வோங் விளக்கினார்.

ஆசியான்-ஜிசிசி-சீனா உச்சநிலை மாநாட்டிலும் பிரதமர் வோங் பேசினார்.

இந்த முத்தரப்பும் இணைந்த உச்சநிலை மாநாடு நடைபெறுவது இதுவே முதல்முறை.

அமெரிக்கா-சீனா உறவில் முன்னேற்றம்

செவ்வாய்க்கிழமை மாலை தமது பயணத்தின் முடிவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் வோங், அமெரிக்காவின் வரிகள் குறித்தும் அமெரிக்கா-சீனா உறவு குறித்தும் கருத்துரைத்தார்.

இரு நாடுகளும் உலகப் பொருளியலின் பிரதான வளர்ச்சி இயந்திரங்கள் என்ற அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்திற்கு முன்பைவிட அதிகப்படியான வரிகள் போடப்பட்டுள்ளது இரு பெரும் பொருளியல்களுக்கு மட்டுமல்லாமல் சிங்கப்பூர், ஆசியான் என உலகின் மற்ற பகுதிகளுக்கும் பாதிப்பை உணரமுடியும் என்றார்.

ஆசியான் மாநாட்டிற்கு வருகை தந்த சீனப் பிரதமர் லி சியாங்குடன் உரையாடியதாகச் சொன்ன பிரதமர், அமெரிக்காவுடன் சீனாவின் பேச்சுவார்த்தை குறித்து அவர் பகிர்ந்ததாகத் தெரிவித்தார்.

வரிகளைக் குறைக்க இருதரப்பும் சமரசம் கண்டுள்ளது வரவேற்கத்தக்கது. உலகப் பொருளியல் அதன் விளிம்புக்குச் சென்று திரும்பியுள்ளது என்று திரு வோங் தெரிவித்தார்.

உறுப்பு நாடுகள் தனித்தனியேயும் ஆசியான் அமைப்பாக ஒன்றுபட்டும் அமெரிக்காவை ஈடுபடுத்தி பலன்பெற வேண்டும் என்றார் அவர்.

காஸாவில் உடனடி சண்டைநிறுத்தம் தேவை

காஸா விவகாரம் குறித்து கருத்துரைத்த திரு வோங், உடனடி சண்டைநிறுத்தத்திற்கும் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கும் சிங்கப்பூர் குரல்கொடுப்பதாகத் தெரிவித்தார்.

இஸ்ரேலின் நடவடிக்கைகளால் காஸாவில் நிலவும் மனிதாபிமான பேரிடர் மிகுந்த வருத்தமளிக்கிறது என்று பிரதமர் தெரிவித்தார்.

அனைத்துத் தரப்பினரும் அனைத்துலக மனிதாபிமான சட்டம் உட்பட அனைத்துலக சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அப்போதுதான் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவோருக்கு சென்று சேரமுடியும்.

இருப்பினும், சண்டைநிறுத்தம் போதுமானதல்ல என்றும் அது தற்காலிக தீர்வுதான் என்பதையும் நினைவூட்டினார்.

இரு தனித்தனி நாடுகளாவதே கலவரங்களுக்கு முழுமையான, நியாயமான, நிலையான தீர்வாகும் என்பதை வலியுறுத்தினார் பிரதமர்.

அமைதியையும் நிலைத்தன்மையையும் நிலைநாட்ட ஆசியானும் ஜிசிசியும் கலந்துரையாடல்களையே இதுவரை நாடிவந்துள்ளன. உலகில் நிலவிவரும் சண்டைகளை எதிர்கொண்டுவரும் பொருட்டு அது மிகவும் முக்கியமானது என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்