நீதிமன்றத்தில் கத்தியதற்காகவும் நீதிபதியை இழிவுபடுத்தியதற்காகவும் பெண் ஒருவருக்கு மேலும் ஐந்து வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அரசாங்க அதிகாரியை நோக்கி தகாத சொற்களைக் கூறிய குற்றச்சாட்டை டர்ச்சண்டி டான் என்ற அப்பெண் ஒப்புக்கொண்டார். நீதிமன்றத்தில் முறையற்று நடந்துகொண்டதாக அவர்மீது சுமத்தப்பட்ட இரண்டாவது குற்றச்சாட்டும் கவனத்தில் கொள்ளப்பட்டது.
காவல்துறை விசாரணைக்கு வர மறுத்தது, நீதிமன்றத்தில் முன்னிலையாக மறுத்தது, காவல்துறையினரை நோக்கி உமிழ்ந்தது ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக ஏற்கெனவே அவர் எட்டு வாரச் சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார். அது முடிந்ததும் மேலும் ஐந்து வாரங்களை அவர் சிறையில் கழித்தாக வேண்டும்.
கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தின்போது முகக்கவசம் அணியத் தவறியதாக பிரிட்டனைச் சேர்ந்த பெஞ்சமின் கிளின் என்பவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவரது வழக்கு 2021 ஆகஸ்ட் 18ஆம் தேதி காலை இடம்பெற்ற நிலையில், டானும் நீதிமன்றத்தில் இருந்தார்.
அப்போது வேலையின்றி இருந்த டான், தான் ‘இறையாண்மை’யுடன் கூடியவர் என்றும் தன்னுடைய ஒப்புதலின்றி சிங்கப்பூர் உட்பட எந்த ஓர் அரசாங்கமும் தன்மீது அதிகாரம் செலுத்த முடியாது என்றும் கூறினார்.
நீதிமன்றத்தின் பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த டான், மூக்கு வெளியில் தெரியும்படி முகக்கவசம் அணிந்திருந்ததாகக் கூறப்பட்டது. அதனைக் கண்ட பாதுகாவலர் ஒருவர், முகக்கவசத்தை முறையாக அணியும்படி அவரைக் கேட்டுக்கொண்டார்.
அதனையடுத்து, நீதிமன்றத்தில் கத்தியும் நீதிபதியை இழித்துரைத்தும் அவர் அமளியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.


