தோள்பட்டை மாற்று அறுவைச் சிகிச்சையில் விண்வெளி தொழில்நுட்பம்

தோள்பட்டை மாற்று அறுவைச் சிகிச்சையில் விண்வெளி தொழில்நுட்பம்

2 mins read
ஓர் ஆண்டில் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் ஏறத்தாழ 40 தோள்பட்டை மாற்று அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
188498fb-3950-4430-98c0-0787b40f7b8d
சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் உயிரியல் ஆய்வகத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் வோங் யொக் ரங் (இடது), இணைப் பேராசிரியர் டென்னி லாய் (வலது) முப்பரிமாண முறையில் அச்சடித்து வடிவமைக்கப்பட்ட தோள்பட்டை பாகத்தை, 68 வயது ஐடிஇ தொழிற்கல்லூரி விரிவுரையாளரான திரு எரிக் லோவிடம் காட்டுகின்றனர். திரு லோ ஏற்கெனவே தோள்பட்டை அறுவைச் சிகிச்சையை செய்துகொண்டவர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

தோள்பட்டை சார்ந்த பிரச்சினைகளைக் கொண்ட நோயாளிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி, அவர்களுக்கு நல்ல பலன்களை ஏற்படுத்தும் வகையில் மருத்துவர்கள் விண்வெளித் தொழில்நுட்பத்தை மாற்று அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்துகின்றனர்.

நீண்டநாள் பயனளிக்கக்கூடிய வகையில் கட்டுப்படியான விலையில் சிங்கப்பூர் பொது மருத்துவமனை (எஸ்ஜிஎச்) மருத்துவர்கள் இதனை மேற்கொள்கின்றனர்.

விண்வெளித் தொழில்நுட்பத்தைக்கொண்டு முப்பரிமாண முறையில் (3டி) தோள்பட்டையின் பாகங்கள் துல்லியமாக வடிவமைக்கப்பட்டு, நோயாளிகளுக்குப் பொருத்தப்படுகின்றன.

பொதுவாக, தோள்பட்டை மாற்று அறுவை சிகிச்சை செய்வோருக்கு அவர்களது வாழ்க்கைமுறையே மாறுபடும் சாத்தியம் உள்ளது. நோயாளிகளுக்கு கைகளை அசைப்பதும் இயல்பான நடமாட்டமும் பாதிக்கப்படலாம்.

அதனால், தற்போது சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் உயிரியல் பொறியாளர்கள், அறுவை சிகிச்சை மருத்துவர்களுடன் இணைந்து இந்த விண்வெளித் தொழில்நுட்பத்தை தோள்பட்டை மாற்று அறுவை சிகிச்சைகளில் உள்ளடக்கியுள்ளனர்.

இதில், சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் விளைவுகள் முன்கூட்டியே கணிக்கப்படுகின்றன. நோயாளியின் எலும்பின் அமைப்பு, மென்மையான திசுக்கள் போன்றவை மாற்றுத் தோள்பட்டையுடன் எவ்வாறு இணைந்து செயல்படுகின்றன, அது எத்தனை நாள் நீடிக்கும் போன்ற விவரங்கள் அறுவை சிகிச்சைக்கு முன்னர் ஆய்வு செய்யப்படும்.

“நோயாளியின் எலும்பின் தரம், மூட்டு சுழற்சியின் தன்மை, பாதிப்பின் அளவு போன்றவற்றை கருத்தில்கொண்டு மருத்துவர்கள் சிறந்த வழிகளை அடையாளம் காணவேண்டும்.

“மேலும், முறையான பரிமாணத்துடன் மாற்று எலும்புகளின் அளவை சரியாகத் தேர்வுசெய்யவேண்டும்,” என்று எஸ்ஜிஎச் மருத்துவமனையின் எலும்பியல் அறுவைச் சிகிச்சைப் பிரிவின் இணைப் பேராசிரியர் டென்னி லாய் விளக்கினார்.

“ஆசிய மக்களின் தோள் எலும்புகள், குறிப்பாக பெண்களின் தோள் எலும்பின் அளவு சிறியதாக அமைந்துள்ளன. பொதுவாக மாற்றுத் தோள்பட்டையின் அளவு மேற்கத்தியர்களுக்கு உகந்தவை. எனவே சிடி ஸ்கேன் முறையில் நிகழ்நேரத்தில் ஒவ்வொரு அறுவை சிகிச்சையையும் கணினியில் சோதனை முறையில் பயிற்சி செய்தோம்.

“அதன்படி, ஒரு முப்பரிமாண வழிகாட்டியையும் அச்சடித்துள்ளோம். நோயாளிகள் தனிப்பட்ட முறையில் அதைக்கொண்டு துல்லியமாகப் பயிற்சிகள் செய்யும் வகையில் அது அமைந்துள்ளது.

“இது எதிர்காலத்துக்கான வழிமுறை என்று நம்புகிறேன்,” என்றார் எஸ்ஜிஎச் மருத்துவமனையின் உயிரணு, திசு ஆகியவற்றின் உயிரியல் பொறியியல் துறையின் தலைவருமான திரு லாய்.

சிங்கப்பூர் பொது மருத்துவமனை ஆண்டுக்கு ஏறத்தாழ 40 தோள்பட்டை மாற்று அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்கிறது.

குறிப்புச் சொற்கள்