சிங்கப்பூரிலேயே தயாரிக்கப்பட்ட விண்வெளி கண்காணிப்புச் செயற்கைக்கோள், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) ஸ்பேஸ்எக்ஸ் ஏவுகணைமூலம் விண்வெளியில் ஏவப்பட்டது.
இது, காட்டுத் தீ, எண்ணெய்க் கசிவு போன்றவற்றை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணிக்கும். அது மட்டுமல்லால் இத்தகைய பேரிடர் கண்டறியப்பட்டால் அது உடனடியாக பூமிக்குத் தகவல் அனுப்பும்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தால் (என்டியு) உருவாக்கப்பட்ட இந்தச் செயற்கைக்கோள், மேகங்கள் இல்லாத படங்களை ஆய்வுசெய்ய உதவும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ள முதல் ‘நானோ-செயற்கைக்கோள்’ ஆகும். இதனால் இது, பயனுள்ள தரவுகளை மட்டுமே திருப்பியனுப்பும். இது பூமியில் உள்ள அறிவியல் அறிஞர்கள் ஒவ்வொரு படத்தையும் ஆராய வேண்டிய சிரமமான வேலையைக் குறைக்கிறது.
‘கிரிம்சன்-1’ எனப்படும் இந்தச் செயற்கைக்கோள், ஓர் ஆண்டுகாலத் திட்டத்தின்போது சோதிக்கப்படும். இந்த ஐந்து கிலோ எடையுள்ள செயற்கைக்கோளின் கணினி அமைப்பு எவ்வாறு வெப்பத்தை நிர்வகிக்கிறது, எவ்வாறு ஆற்றலைப் பயன்படுத்துகிறது என்பதை ஆய்வாளர்கள் ஆய்வு செய்வார்கள் என்று என்டியுவும் சிங்கப்பூரின் விண்வெளி நிறுவனமும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளன.
இந்த விண்வெளி வாகனம், சூரிய ஆற்றலை மின்சாரமாக மாற்றும் புதிய வகை சூரிய மின்சக்தி தகடுகளையும் கடுமையான விண்வெளிச் சூழல்களில் சோதிக்கும்.
