ஸ்பெயினில் பெண் ஒருவரைக் கொலை செய்ததாக நம்பப்படும் சிங்கப்பூர் ஆடவரை சிங்கப்பூருக்குத் திருப்பி அனுப்ப அந்நாட்டு குடிநுழைவுக் காவல்துறை விண்ணப்பம் செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் வெள்ளிக்கிழமை (மே 2) தெரிவித்துள்ளன.
ஸ்பெயினில் விடுமுறைக்காக சென்ற ஆட்ரி ஃபாங் என்ற பெண்ணை மிச்செல் ஓங் என்ற ஆடவர் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30க்கும் மேற்பட்ட கத்திக்குத்துக் காயங்களுடன் திருவாட்டி ஃபாங்கின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
தற்போது சட்டவிரோதமாக ஸ்பெயினில் உள்ள ஓங் சிங்கப்பூருக்கு அனுப்பும்படி ஸ்பானிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஸ்பெயினுக்குள் நுழைவதிலிருந்து ஓங்கைத் தடை செய்யும்படியும் அவர்கள் குறிப்பிட்டனர்.
திருவாட்டி ஃபாங்கின் குடும்பத்தைப் பிரதிநிதிக்கும் தனியார் வழக்கறிஞர் ஓங்கைத் திரும்ப அனுப்ப ஒப்புக்கொண்டார்.
ஓங் தற்போது மார்சியாவில் உள்ள சங்கொனிரா சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், ஓங் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவதை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று தற்காப்பு வழக்கறிஞர் மரியா சொன்னார்.
ஸ்பெயினில் நடைபெறும் குற்ற வழக்கில் ஓங் ஈடுபட்டுள்ளதால் உரிய சட்ட உத்தரவாதங்களுடன் அவருக்குத் தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என்று சுட்டிய அவர், சொந்த நாட்டுக்கு அவரைத் திரும்ப அனுப்புவதன் மூலம் ஸ்பானிய சட்ட நடைமுறைகளைத் தவிர்ப்பது போல இருக்கும் என்றார்.
ஸ்பெயினில் தனியாகப் பயணம் செய்த திருவாட்டி ஃபாங்கின் சடலம் 2024, ஏப்ரல் 10ஆம் தேதி அபனிலா நகரில் லாரிகள் நிறுத்துமிடத்துக்கு அருகே கண்டெடுக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
தொடக்கக் கட்ட பிரேதப் பரிசோதனையில் கத்திக்குத்துக் காயங்களும் தலையில் ஏற்பட்ட அடியும் அவரது மரணத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டது.
சில நாள்கள் கழித்து கண்காணிப்புக் கேமராவில் ஓங் ஓட்டியதாக நம்பப்படும் காரில் திருவாட்டி ஃபாங் சென்றதைக் காட்டும் காணொளி மூலம் ஓங் கைது செய்யப்பட்டார்.

