தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எம்ஆர்டி, எல்ஆர்டி நம்பகத்தன்மையை மேம்படுத்த சிறப்பு ஆலோசனைக் குழு

2 mins read
ரயில்வே துறையில் அனுபவமிக்க ஐவர் இடம்பெற்றிருப்பர்
ef0896ff-df5a-4c7a-992a-1e2517630727
பணிக்குழுவில் உள்ளோர் செயல்பாடு, நிர்வாகம் ஆகிய பல அம்சங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரின் பெருவிரைவு ரயில் (எம்ஆர்டி), இலகு ரயில் (எல்ஆர்டி) கட்டமைப்புகளின் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் புதிய பணிக்குழுவிற்கு ஆதரவளிக்கும் வகையில் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட தன்னிச்சையான ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

உலகெங்குமுள்ள ரயில்வே துறை வல்லுநர்கள் அதில் இடம்பெற்றுள்ளனர்.

அவர்கள் ஐவரும் முக்கியப் பொறியியல், நிர்வாகப் பதவிகளில் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் என்று நிலப் போக்குவரத்து ஆணையமும் எஸ்எம்ஆர்டி, எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனங்களும் திங்கட்கிழமை (அக்டோபர் 6) வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.

செயலாக்கம், நிர்வாகம், முக்கிய ரயில் கட்டமைப்பின் பராமரிப்பு போன்ற முக்கியத் துறைகளில் அந்தக் குழுவினர் அனுபவம் வாய்ந்தவர்கள். பாதுகாப்பான, செயல்திறன் மிக்க, நம்பகமான ரயில் கட்டமைப்பை உறுதிசெய்ய இத்தகைய அனுபவம் உதவும் என்று கூட்டறிக்கை குறிப்பிட்டது.

புதிய ஆலோசனைக் குழுவில் ஹாங்காங் பொதுப் போக்குவரத்து நிறுவனமான ‘எம்டிஆர் கார்ப்பரேஷனின்’ டாக்டர் டோனி லீ கார் யுன், சமிக்ஞைக் கட்டமைப்பை வழங்கும் பிரெஞ்சு நிறுவனமான தேல்சின் ஆசியப் பிரிவைச் சேர்ந்த திரு பேட்ரிக் பாவ்சார்ட், குவாங்ஸோ மெட்ரோ குழுமத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் டாக்டர் சாய் சாங் ஜுன், தைப்பே விரைவுப் போக்குவரத்து நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ட்ஸே ஹுயெல் ஷெங், ஜப்பானின் மெய்டென்ஷா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் திரு கொன் ஷினிச்சிரோ ஆகிய ஐவரும் அந்தத் தன்னிச்சையான ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் கிட்டத்தட்ட 40 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள்.

மூன்று மாதங்களில் எம்ஆர்டி, எல்ஆர்டி ரயில் சேவைகளில் ஏறக்குறைய 15 இடையூறுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி புதிய பணிக்குழு அறிவிக்கப்பட்டது. அதில் நிலப் போக்குவரத்து ஆணையம், எஸ்எம் ஆர்டி, எஸ்பிஎஸ் டிரான்சிட் ஆகியவற்றைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

போக்குவரத்துத் தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவிடம் பணிக்குழுவின் கண்டுபிடிப்புகள், வழக்கமான இடைவெளியில் தெரிவிக்கப்படும் என்றும் இந்த ஆண்டு இறுதியில் குழு அதன் இறுதிப் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும் என்றும் கூறப்பட்டது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐவர் ஆலோசனைக் குழு, பணிக்குழுவின் கண்டுபிடிப்புகளை மறுஆய்வு செய்து, உகந்த அறிவுரைகளை வழங்குவதுடன் பணிக்குழுவுடன் அணுக்கமாகப் பணியாற்றி சிங்கப்பூரின் ரயில் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை உருவாக்க உதவும் என்று ஆணையம் கூறியது.

குறிப்புச் சொற்கள்