மற்றவர்கள்மீது அக்கறை கொள்வது தன் பொறுப்பு என்பதையும் தாண்டி, அது தனக்கு வலிமையையும் மகிழ்ச்சியையும் தருகிறது என்கிறார் தஷ்வின்வரன் பாலாசுப்பிரமணியம், 17.
தொழில்நுட்பக் கல்விக் கழக மத்திய வளாகத்தில் முதலாம் ஆண்டு விண்வெளி இயந்திர தொழில்நுட்பம் படிக்கும் இவரின் வாழ்க்கைப் பாதை பல ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டிருந்தது.
தஷ்வின்வரன் ஸ்பெக்ட்ரா உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலை 2ல் பயின்றபோது தம் தந்தை ஐந்தாம் கட்ட சிறுநீரகச் செயலிழப்பால் அறுவை சிகிச்சை செய்துகொண்டு நீண்டகாலத்திற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் இவரது குடும்பம் நிதி நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது.
“எதனைப் பற்றியும் கவலைப்படாமல் வாழ்ந்துகொண்டிருந்த நான், என் தந்தைக்கு உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டபோது என்னுடைய பொறுப்பை உணர ஆரம்பித்தேன்,” என்றார் அவர்.
ஐந்து பேர் கொண்ட குடும்பத்தில், வீட்டு வேலைகளுடன் தம் தாயாருக்கு உதவி செய்யவும் தம் தந்தையின் மருத்துவத் தேவைகளைப் கவனித்துக்கொள்ளும் பொறுப்பையும் தஷ்வின்வரன் ஏற்றார்; படிப்பிலும் முழுக் கவனம் செலுத்தினார்.
சவால்கள் இருந்தபோதிலும், உயர்நிலைப் பள்ளி மாணவர் மன்றத்தின் துணைத் தலைவர் பதவியை இவர் ஏற்று படிப்பு, குடும்பக் கடமைகளுடன் சக மாணவர்களை வழிநடத்தும் பொறுப்பையும் திறம்படச் சமாளித்தார்.
தந்தையின் உடல்நலப் பிரச்சினையின்போது தம் நண்பர்கள் தனக்கு அளித்த ஆதரவிற்கு நன்றி செலுத்த விரும்பிய தஷ்வின்வரன், உயர்நிலை 4 வழக்கநிலைத் தேர்வில் அவர்கள் தேர்ச்சி பெற தம்மால் முடிந்த அளவிற்கு உதவினார்.
“என் உதவியுடன் மற்றவர்கள் தேர்ச்சி பெறும்போது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்பதை அத்தருணம் எனக்குக் காட்டியது,” என்றார் தஷ்வின்வரன்.
தொடர்புடைய செய்திகள்
படிப்பில் தொடர்ந்து தேர்ச்சி பெற்று, சிங்கப்பூர் ஆகாயப்படையில் பொறியாளராகும் கனவை நனவாக்குவதில் இவர் உறுதியாக உள்ளார்.
இவருக்கு கல்வி அமைச்சின் சகலதுறை உன்னதத்திற்கான லீ குவான் யூ விருது (உயர்நிலைப்பள்ளி பிரிவு) வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டின் சிறப்பு விருதுகள் நிகழ்ச்சியில் விருது பெற்ற 89 கல்வி நிலையங்களைச் சேர்ந்த 199 மாணவர்களில் தஷ்வின்வரனும் ஒருவர்.
கல்வி நடவடிக்கைகளிலும் கல்விக்கு அப்பாற்பட்டு புறப்பாட நடவடிக்கைகளிலும் சாதனை புரிந்த மாணவர்களை அங்கீகரிக்க ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த விருதளிப்பு நிகழ்ச்சி, இவ்வாண்டு சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக கலாசார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) நடைபெற்றது.
கல்வி அமைச்சர் சான் சுன் சிங் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட விருதுகளில் ஒன்றான பிரதமர் புத்தகப் பரிசை ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி மாணவி தெரசா அல்போன்ஸ் குழிமட்டாஹிலும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகக் கணித, அறிவியல் உயர்நிலைப்பள்ளி மாணவர் பழனியப்பன் சிதம்பரமும் பெற்றனர்.
சகலதுறை உன்னதத்திற்கான லீ குவான் யூ விருதுபெற்ற 23 மாணவர்களில் தஷ்வின்வரனும் தெரசாவும் மெதடிஸ்ட் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவி அஷ்மிதா ஸ்ரீதரனும் அடங்குவர்.
ஹென்ரி பார்க் தொடக்கப்பள்ளி முன்னாள் மாணவி அஷ்மிதா, 13, தனது விடாமுயற்சிக்கும் தலைமைத்துவப் பண்புக்கும் தொடக்கப்பள்ளி பிரிவில் இவ்விருதைப் பெற்றார்.
பள்ளியில் தலைமைச் சட்டாம்பிள்ளையாக சக மாணவர்களை வழிநடத்தி, மாணவர்களின் பிரதிநிதியாக அஷ்மிதா செயல்பட்டார்.
“மற்றவர்களின் யோசனைகளைச் செவிசாய்க்கவும் முழுமையான பள்ளிச் சமூகத்திற்கு ஆக்ககரமான தாக்கத்தை ஏற்படுத்தும் தீர்மானங்களை எடுக்கவும் இப்பதவி எனக்கு கற்றுக்கொடுத்தது,” என்றார் அஷ்மிதா.
விளையாட்டுகளில் அதிக ஈடுபாடு கொண்டிருக்கும் அவர் கொவிட்-19 தொற்று, டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டபோது, மனத்தைத் தளரவிடாமல் முழு ஆரோக்கியத்தை அடைந்தபின் தீவிரமாகப் பயிற்சி செய்து தேசிய பள்ளி விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் வென்றார்.
ஓய்வு நேரத்தில் தொண்டூழியத்திலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.
“நிதி, குடும்பப் பிரச்சினைகளில்லாத சூழலில் வளர்ந்த நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன். பிரச்சினைகளால் அவதியுறுவோருக்கு உதவ விரும்புகிறேன்,” என்றார் அவர்.
இந்த விருதைப் பெற்றதில் பெருமிதம் கொள்ளும் அஷ்மிதா, எதிர்காலத்தில் படிப்பிலும் தலைமைத்துவத்திலும் தொடர்ந்து சிறந்து விளங்கி, கால்நடை மருத்துவராக விரும்புகிறார்.

