புதிய திட்டம் மூலம் சிறப்புத் தேவையுள்ளோருக்கான கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் தொழில் ரீதியில் படிப்படியாக உயரவும் தலைமைத்துவப் பதவியை வகிக்கவும் கூடுதல் வாய்ப்புகள் வழங்க புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படுவதாகக் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
சிறப்புக் கல்விப் பள்ளி ஆசிரியர்களுக்கான தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டம் 2025ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் சான் அக்டோபர் 3ஆம் தேதியன்று அறிவித்தார்.
மற்ற பள்ளிகளில் பணிபுரியும் கல்வியாளர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி வாய்ப்புகளைப் போலவே சிறப்புக் கல்வி ஆசிரியர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.
முதலில் 50 பேருக்குப் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை தேவைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் என்று கல்வி அமைச்சு கூறியது.
‘ஆட்டிசம்’ எனும் மதியிறுக்க குறைபாடு கொண்ட சிறுவர்களுக்கான ரெயின்போ சென்டர் அட்மிரல்டி ஹில் பள்ளிக்கு அமைச்சர் சான் அக்டோபர் 3ஆம் தேதியன்று சென்றார்.
அங்கு அவர் புதிய திட்டம் குறித்து உரையாற்றினார்.
சிறப்புக் கல்விப் பள்ளிகளில் தலைமைத்துவப் பதவிகளை வகிப்பவர்களில் ஏறத்தாழ 50 விழுக்காட்டினர் மற்ற பள்ளிகளிலிருந்து வந்தவர்கள்.
தொடர்புடைய செய்திகள்
“இது போதுமானதாக இருக்காது. மற்ற பள்ளிகளில் தலைமைத்துவப் பதவிகளை வகிப்பவர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுவதைப் போலவே சிறப்புக் கல்வி ஆசிரியர்களுக்கும் பயிற்சித் திட்டங்கள் இருக்க வேண்டும்,” என்று அமைச்சர் சான் கூறினார்.
இதன்மூலம் சிறப்புக் கல்விப் பள்ளிகளில் தலைமைத்துவப் பதவி வகிப்பவர்களும் மற்ற பள்ளிகளில் தலைமைத்துவப் பதவி வகிப்பவர்களும் ஒருவருக்கொருவரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.
திட்டத்தின்கீழ் பயிற்சி பெறுபவர்களுக்கு அனுபவமிக்க தலைவர்கள் வழிகாட்டக்கூடும்.
அத்துடன் சிறப்புக் கல்வித்துறையில் உள்ள பல்வேறு திட்டங்ளிலும் கல்வி அமைச்சின் தலைமைத்துவத் திட்டங்களிலும் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கக்கூடும்.