நவம்பர் 2 முதல் டிசம்பர் 5 வரையில் ரத்த தானம் செய்வோருக்குச் சிறப்புச் சலுகை

நவம்பர் 2 முதல் டிசம்பர் 5 வரையில் ரத்த தானம் செய்வோருக்குச் சிறப்புச் சலுகை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

29 Oct 2026 - 6:14 pm

2 mins read

மெஸ்ஸினா, மிக்சூ, யோ-சீ போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களின் சுவைமிகு பண்டங்களுக்கான பற்றுச்சீட்டுகளை ரத்த தானம் செய்வோருக்கு வழங்கப்போவதாகச் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 2ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரையில் இச்சலுகை வழங்கப்படும் என்று சங்கம் வியாழக்கிழமை (அக்டோபர் 19) வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ரத்த தானம் செய்வோரை ஊக்குவித்து அதன் நன்மைகளை மக்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டு இறுதியிலும் இதுபோன்ற செயல்பாடுகளை சங்கம் முன்னெடுக்கிறது. இவ்வாண்டு இயக்கத்தின் கருப்பொருளின்படி, ஒரு புட்டி ரத்தமும் ஒரு உணவுப் பண்டமும் இணையாகக் காட்டப்படுகின்றன. ஒன்று எளிமையான சுவைதரும், மற்றொன்று உயிரைக்காக்கும் என்ற பொருள்படும்படி அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

செஞ்சிலுவைச் சங்கத்தின் இணையத்தளத்தில் (redcross.sg/events-campaigns/not-all-pints-are-equal) உள்ள முத்திரையை ரத்த தானத்துக்கு முன் பதிவு செய்யும்போது அங்குள்ள அதிகாரிகளிடம் காட்டி சலுகைகளைப் பெறலாம்.

சிங்கப்பூரில் மக்கள் ரத்த தானம் செய்ய ஐந்து வங்கிகள் உள்ளன. அவை ஊட்ரமில் உள்ள சுகாதார அறிவியல் ஆணையக் கட்டடம் (ஸெச்எஸ்ஏ), டோபிகாட் எக்ஸ்செஞ்ச், ஜூரோங்கின் வெஸ்ட்கேட் டவர், ஒன்பொங்கோல் ஒருங்கிணைந்த சமூக நடுவம், உட்லண்ட்ஸ் சிவிக் சென்டர் ஆகிய இடங்களாகும்.

நவம்பர் 2 முதல் 15ஆம் தேதிவரை ரத்த தானம் செய்வோருக்கு மிக்சூ $5 பற்றுச்சீட்டு, நவம்பர் 15 முதல் 26ஆம் தேதிவரை ரத்த தானம் செய்வோருக்கு மெஸினாவின் கூடுதலாக ஐஸ்கிரீம் பண்டம் பெறும் வாய்ப்புக்கான பற்றுச்சீட்டு, நவம்பர் 27 முதல் டிசம்பர் 6ஆம் தேதிவரை ரத்த தானம் செய்வோருக்கு யோ-சீ நிறுவனத்தின் குளிர்ந்த தயிர் பதார்த்தத்துக்கான $5 பற்றுச்சீட்டு போன்ற சிறப்புச் சலுகைகள் வழங்கப்படவுள்ளன.

குறிப்புச் சொற்கள்