வெளிநாட்டு ஊழியர்களுக்கான சிறப்புப் பொங்கல் கொண்டாட்டம்

1 mins read
3ee7fe39-0a7b-4f07-8c76-0e047809649c
நிகழ்ச்சியில் பங்காற்றியோரைச் சிறப்பிக்கும் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் ‌ஷில்பாக் அம்புலே. - படம்: சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகம்

சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகம், சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டு ஊழியர்களுக்காகச் சிறப்புப் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.

கலை, கலாசார நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய இந்நிகழ்ச்சியில் ஏறத்தாழ 1,500 வெளிநாட்டு ஊழியர்கள் பங்கேற்றனர். ஜனவரி 11ஆம் தேதியன்று செம்பவாங் பொழுதுபோக்கு நிலையத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

தூதரகத்தின் சார்பில் இரண்டாவது முறையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் ‌ஷில்பாக் அம்புலே சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

வெளிநாட்டு ஊழியர்களுடன் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்த சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் ‌ஷில்பாக் அம்புலே. மனிதவள அமைச்சின் ஏஸ் குழுவின் தலைவர் யுவி ஃபாய் துங் உடன் உள்ளார்.
வெளிநாட்டு ஊழியர்களுடன் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்த சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் ‌ஷில்பாக் அம்புலே. மனிதவள அமைச்சின் ஏஸ் குழுவின் தலைவர் யுவி ஃபாய் துங் உடன் உள்ளார். - படம்: இன்ஸ்டகிராம் / சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகம்

இந்நிகழ்ச்சியானது வெளிநாட்டு ஊழியர்களுக்கு இடையிலான நட்புறவை வளர்த்ததுடன், ஒற்றுமையைக் கொண்டாடும் நிகழ்ச்சியாகவும் அமைந்ததாகத் தூதரகம் குறிப்பிட்டது.

பொங்கல் தினக் கொண்டாட்ட மனநிலையை மேலும் மகிழ்ச்சியாக்க ஏறத்தாழ 50 கலைஞர்கள் இசை, நடன நிகழ்ச்சிகளைப் படைத்தனர்.

ஊழியர்களுக்கான யோகா, தியானப் பயிற்சி அமர்வுகளும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன. அத்துடன், இந்தியாவின் பாரம்பரிய பண்டிகைகளையும், விதவிதமான ஆடை வகைகளையும் எடுத்துக்காட்டும் அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

வெளிநாட்டு ஊழியர்களுக்காக நடத்தப்பட்ட சிறப்புப் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் திரளாகப் பங்கேற்றோர்.
வெளிநாட்டு ஊழியர்களுக்காக நடத்தப்பட்ட சிறப்புப் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் திரளாகப் பங்கேற்றோர். - படம்: இன்ஸ்டகிராம் / சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகம்

‘அறுவடை’ எனும் கருப்பொருளில் அமைந்த பல்வேறு பொங்கல் சார்ந்த நடவடிக்கைகளிலும் ஊழியர்கள் உற்சாகத்துடன் ஈடுபட்டனர்.

ஏறத்தாழ 110க்கும் மேற்பட்ட தொண்டூழியர்களின் ஆதரவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம் (சிஃபாஸ்), ஆர்ய யோகா, டார்ம் மாம்ஸ், மலையாளிகள் சங்கம் ஆகிய அமைப்புகளும் பங்கேற்றன.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நண்பகல் உணவு, தின்பண்டங்கள், பானங்கள் ஆகியவற்றுடன் அன்பளிப்புப் பைகளும் வழங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்