ஈசூன் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலயத்தில் ஜனவரி 14ஆம் தேதி பொதுமக்கள், ஆலயப் பணியாளர்கள், தொண்டூழியர்கள் ஒன்றுகூடி பொங்கல் வைத்து தமிழர் திருநாளான பொங்கலைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஸ்ரீ பாலசுப்பிரமணியர் சன்னதிக்குமுன் வைக்கப்பட்ட இரண்டு பொங்கல் பானைகள் காலை 8:30 மணி முதல் ஆரவார ‘பொங்கலோ பொங்கல்’ முழக்கத்துடன் பொங்கி வழிந்தன.
“ஆலயத்தில் எல்லாரும் ஒன்றுகூடி பொங்கலிட்டு இறைவனை வணங்குவது ஒரு சிறப்பான அனுபவம்,” என்றார் ஆலயத்தின் அர்ச்சகர் சோமசுந்தர சிவாச்சாரியார்.
முதல் நாள் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக மட்டுமின்றி நம்மைச் சுற்றியுள்ள அனைவருடனும் அன்பைப் பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பாகவும் இந்தக் கூட்டுப் பொங்கல் விளங்குகிறது என்றார் ஆலயத்தின் செயலாளர் டி தனேந்திரன்.
தமிழகத்திலிருந்து சிங்கப்பூர் வந்து பத்தாண்டுகளுக்குமேல் இங்கு வசித்து வரும் சரஸ்வதி புனிதமரம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலயத்துக்கு அடிக்கடி வருவதுண்டு.
“தமிழ்நாட்டில் கால்நடைகளுடன் பண்ணையில் பொங்கல் கொண்டாடிய ஞாபகம் இருக்கிறது. சிங்கப்பூரில் இப்போது வீட்டில் நான் பொங்கல் கொண்டாடுவதில்லை. இருப்பினும், ஆண்டுதோறும் தவறாமல் ஆலயப் பொங்கல் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு இறைவனையும் வணங்கிச் செல்வேன்,” என்று அவர் சொன்னார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக ஆலயத்தில் பூக்கள், விளக்குகள் விற்கும் சுசீலா பொங்கல் திருநாளன்று காலைப் பொழுதை அங்குச் செலவிடுவதாக தெரிவித்தார்.
“மாலையில் வேலையும் கூட்டுப் பொங்கல் கொண்டாட்டமும் முடிந்த பிறகே என் வீட்டில் பொங்கல் வைப்பேன்,” என்றார் அவர்.