ஷாங்காயுடன் இணைந்து சிங்கப்பூர் நாணயச் சாலையின் சிறப்பு தயாரிப்புகள்

ஷாங்காயுடன் இணைந்து சிங்கப்பூர் நாணயச் சாலையின் சிறப்பு தயாரிப்புகள்

படம்: சிங்கப்பூர் நாணயச் சாலை

30 Oct 2026 - 6:42 pm

2 mins read
டிராகன் மிருகத்தின் நிழலுருவம் நாணயத்தின் ஒரு பக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிராகன் மிருகத்தின் நிழலுருவம் நாணயத்தின் ஒரு பக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. - படம்: சிங்கப்பூர் நாணயச் சாலை / இன்ஸ்டகிராம்

நாணயங்களைச் சேகரிப்போரின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக சிங்கப்பூர் நாணயச் சாலை (சிங்கப்பூர் மின்ட்) சீனாவின் ஷாங்காய் மின்ட் எனப்படும் அம்மாநிலத்தின் நாணய தயாரிப்பு அமைப்புடன் இணைந்து பல புதிய கவர்ச்சியான நினைவுப் படைப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இரு நாணய தயாரிப்பு அமைப்புகளும் ஒருங்கிணைந்து பல புதிய அதிநவீன வடிவங்களில் கலைஞர்களின் திறனை வெளிப்படுத்தும் நாணயங்களையும் பதக்கங்களையும் வெளியிட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) சிங்கப்பூர் மின்ட் அறிவித்தது.

பரந்து விரிந்த பல விற்பனைச் சந்தைகளைச் சார்ந்தோரிடம் அவற்றை அறிமுகப்படுத்தும் வாய்ப்பை இது அளித்துள்ளதாகவும் சிங்கப்பூர் மின்ட் அதன் அறிக்கையில் தெரிவித்தது.

புதுப்புது வடிவமைப்புகள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. முக்கிய மூன்று அம்சங்களாக ‘உயரும் வளம்’, ‘சீறும் டிராகன்’, ‘கம்பீர சிங்கம்’ போன்று பொருள்படும் பெயர்களில் தங்கம், வெள்ளி ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட நினைவு நாணயங்களும் பதக்கங்களும் அவற்றில் அடங்கும்.

அதோடு ‘விண்வெளிப் பருவங்கள்’ எனப்படும் வெள்ளித் தயாரிப்புகளும், ஷாங்காய்-சிங்கப்பூர் எனும் தலைப்பில் தங்கம், வெள்ளி கட்டிகள் போன்று வடிவமைக்கப்பட்ட அட்டைகளும் சேகரிப்பாளர்களுக்கென வழங்கப்பட்டுள்ளன.

அப்பதக்கங்கள் மிகத் துல்லியமாக, தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒளிப் பின்னணியுடன் கூடிய மேகக்கூட்டத்தில் டிராகன் மிருகத்தின் நிழலுருவம் ஒரு பக்கத்திலும் மற்றொரு பக்கத்தில் கடல், மலைபோன்ற இயற்கை வனப்பில் சிங்கப்பூரின் சிங்கம் நிற்பதுபோலவும் அவை தயாரிக்கப்பட்டுள்ளன.

வடிவமைப்பை எடுத்துக்காட்டும் விதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளியில் தயாரானவையும் உள்ளன. தங்கமும் வெள்ளியும் சேர்ந்து தயாரான வடிவங்களும் 888 என்ற குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வடிவமைப்பும் அவற்றுக்குப் பொருத்தமான பதிவு எண்களுடன் சிங்கப்பூரில் மட்டும் கிடைக்கின்றன.

குறிப்புச் சொற்கள்