செவ்வாய்க்கிழமை (மே 13) முதல் வழங்கப்படும் $500 பெறுமானமுள்ள சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்துவோருக்கு முன்னணிப் பேரங்காடிகள் சிறப்புத் தள்ளுபடிகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
மே 13ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் ஒரே பரிவர்த்தனையில் $60 பெறுமானமுள்ள பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்துவோருக்கு $6 பற்றுச்சீட்டு வழங்கப்படும் என்று ஃபேர்பிரைஸ் குழுமம் தெரிவித்துள்ளது.
இந்த $6 பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்த குறைந்தபட்ச தொகை இல்லை. மேலும், ஒரே பரிவர்த்தனையில் பல $6 பற்றுச்சீட்டுகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். $6 பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்ட மறுநாள் அவற்றைப் பயன்படுத்தலாம். அவற்றை ஜூன் மாதம் 15ஆம் தேதிக்குள் பயன்படுத்த வேண்டும்.
ஜயன்ட், கோல்ட் ஸ்டோரேஜ், சிஎஸ் ஃபிரெஷ், ஜேசன்ஸ் டெலி ஆகியவற்றின் வாடிக்கையாளர்களும் செலவுசெய்யும் ஒவ்வொரு $60க்கும் (ஒரே பரிவர்த்தனை) $6 பற்றுச்சீட்டைப் பெறுவர்.
பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்ட மறுநாள் அவற்றைப் பயன்படுத்தலாம். இப்பற்றுச்சீட்டுகளை மே 27ஆம் தேதிக்குள் பயன்படுத்த வேண்டும்.
குறிப்பிட்ட சில பொருள்களுக்கு ஷெங் சியோங் 50 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்கும். அவற்றில் முட்டைகளும் அரிசியும் அடங்கும்.
மே 13ஆம் தேதியிலிருந்து ஜூன் மாதம் 11ஆம் தேதி வரை ஒரே பரிவர்த்தனையில் $50 பெறுமானமுள்ள சிடிசி பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்துவோருக்கு இச்சலுகை வழங்கப்படும்.

