சிங்கப்பூரில் சாலை விதிமுறைகளை மீறும் ஓட்டுநர்களைப் பிடிப்பதற்காகக் குறிப்பிட்ட இடங்களில் ஒளிந்துநின்று போக்குவரத்துக் காவல்துறையினர் கவனிக்கின்றனர் என்று சிலர் நினைத்திருக்கலாம்.
ஆனால், அத்தகைய கட்டுக்கதை தவறு என்று சிங்கப்பூர்க் காவல்துறை ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளது. சிங்கப்பூர்ச் சாலைகளில் பாதுகாப்பை உறுதிசெய்வதே போக்குவரத்துக் காவல்துறையினரின் பணி என்று அது தெரிவித்தது.
சிங்கப்பூரில் போக்குவரத்துக் காவல்துறையினரைக் கண்டுபிடிப்பதில் தாமே முதல் நிலையில் உள்ளதாகப் பெண் ஒருவர் புதன்கிழமை (அக்டோபர் 1) வெளியிட்ட காணொளியில் குறிப்பிட்டிருந்தார். அதில், ஒரு கம்பத்திற்குப் பின்னால் நின்றுகொண்டு ஒரு மரத்தைத் தொலைநோக்கியின் மூலம் அவர் பார்க்கிறார்.
“மரத்திற்குப் பின்புறம் ஒளிந்துகொள்ள விரும்புகின்றனர். இல்லையா? வேகமாகச் செல்வோரைப் பிடிப்பதற்காக. வேக வரம்பை மீறுவோரில் இத்தனைப் பேரைப் பிடிக்கவேண்டும் என்பதற்காக அவர்கள் அவ்வாறு செய்கின்றனர்,” என்றார் அந்தப் பெண்.
பின்னர் மரத்தை நெருங்கும் அவர், அங்கு எவரும் இல்லை என்பதை உணர்கிறார். அவருக்குப் பின்னால் போக்குவரத்துக் காவல்துறைச் சீருடையில் இருந்த ஒருவர், அந்தப் பெண்ணை அணுகி அங்கு அவர் என்ன செய்கிறார் என்று வினவுகிறார். மரத்திற்குப் பின்னால் தாம் ஒளிந்துகொண்டிருந்ததாகப் பெண் குற்றஞ்சாட்டுவதைக் கண்டு அவர் குழம்பி நிற்பதைப்போல் தெரிகிறது.
காணொளியில் பின்னர் காவல்துறை அதிகாரி ஒருவர் பேசுகிறார்.
“இத்தனைப் பேரைப் பிடிக்கவேண்டும் என்று எந்த வரம்பும் போக்குவரத்துக் காவல்துறையினருக்கு இல்லை,” என்றார் அவர்.
சாலைகளைப் பயன்படுத்தும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்வதே தங்களின் இலக்கு என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“சாலை விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யும் அனைத்து இடங்களும் முறையற்ற விதமாகவோ ஓட்டுநர்களைப் பிடிக்கவேண்டும் என்பதற்காகவோ தெரிவுசெய்யப்படவில்லை,” என்று அவர் சொன்னார்.
மாறாக, விபத்துகள் கூடுதலாக நிகழ்கின்ற அல்லது விதிமுறைகள் அதிகம் மீறப்படுகின்ற பகுதிகள் தெரிவுசெய்யப்படுவதாகக் காவல்துறை அதிகாரி கூறினார்.