வட்டாரங்கள் சார்ந்த அரசியல் சூழல் தொடர்பிலான நிலையற்ற தன்மை, பொருளியல் சவால்கள் ஆகியவற்றைச் சமாளிக்க நிறுவனங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நடவடிக்கைகளை சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் (எஸ்பிஎஃப்) சென்ற ஆண்டு தீவிரப்படுத்தியது.
அனைத்துலக அளவில் தங்களை விரிவுபடுத்திக்கொள்வது, ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவது, கரிமப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கி வைப்பது போன்றவற்றில் நிறுவனங்களுக்கு உதவியதாக சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் தெரிவித்தது. ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் அதன் பரிசீலனை நடவடிக்கையின்போது வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 7) சம்மேளனம் இத்தகவல்களை வெளியிட்டது.
ஒட்டுமொத்தமாக சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் சென்ற ஆண்டு 15,600க்கும் அதிகமான நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி உதவியது. அந்த எண்ணிக்கை, 2023ஆம் ஆண்டு பதிவானதைவிட 18 விழுக்காடு அதிகமாகும்.
கடந்த 12 மாதங்களில் சம்மேளனம், வெளிநாட்டுச் சந்தைகள் தொடர்பான ஒன்பது பயிலரங்குகளையும், அனைத்துலகச் சந்தைகளுக்குள் நுழைவது, தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் தொடர்பில் சுமார் 1,500 ஆலோசனை அமர்வுகளையும் நடத்தியது.
வெளிநாட்டுச் சந்தைகளில் தங்களை விரிவுபடுத்திக்கொள்ள உள்ளூர் நிறுவனங்களுக்கு உதவ சம்மேளனம், எச்எஸ்பிசி வங்கியுடன் இணைந்து செயல்பட்டது; குவாங்டோங், ஹாங்காங், மக்காவ் ஆகியவற்றை உள்ளடக்கும் ‘கிரேட்டர் பே’ வட்டாரம், இந்தியா, மத்திய கிழக்கு போன்ற முக்கிய வர்த்தகப் பகுதிகளில் கவனம் செலுத்தப்பட்டது.
சிங்கப்பூர் நிறுவனங்கள் வட்டார அளவில் தங்களை விரிவுபடுத்திக்கொள்வதற்கு ஆதரவளிக்க சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற எட்டாவது ஆசியான் மாநாட்டுக்கும் சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் ஏற்பாடு செய்தது. அதோடு, ஏழாவது சிங்கப்பூர்-சீன வர்த்தக, முதலீட்டு மாநாட்டுக்கும் அது ஏற்பாடு செய்தது.
சிங்கப்பூர்-சீன வர்த்தக, முதலீட்டு மாநாட்டில் சுகாதாரப் பராமரிப்பு, தளவாடம் போன்ற துறைகளுக்கான 60 மில்லியன் வெள்ளிக்கும் அதிக மதிப்புகொண்ட 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளியல் மண்டலத்தில் செயல்படுவதில் இருக்கும் சவால்களை வர்த்தகங்களிடமிருந்து அறிந்துகொள்ள சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம், சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் செயற்குழு ஒன்றை அமைத்தது. மேலும், தனது ஊழியரணி திட்டங்கள் வாயிலாக கிட்டத்தட்ட 4,200 நிறுவனங்களுக்கு ஆதரவளித்ததாகவும் அது குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
அந்த வகையில், பணியிடைக்காலப் பாதைகள், வாழ்க்கைத் தொழில் மாற்றும் திட்டங்கள் உள்ளிட்டவற்றில் சம்மேளனம், நிறுவனங்களுக்கு உதவியது. அம்முயற்சிகளின் மூலம் 1,000 தனிநபர்கள் பலனடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, 260 பயிற்சிகளின் வாயிலாக 3,600 நிறுவனங்களின் திறன்களை வளர்த்தது. அவற்றில் 3,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், படிப்படியான சம்பள உயர்வுக்கான முத்திரையைப் பெற்றன.