எஸ்பிஎச் மீடியாவும் மரினா பே சேண்ட்சும் கூட்டாக நிகழ்ச்சிகளையும் இயக்கங்களையும் நடத்தவிருக்கின்றன. அதற்கான புரிந்துணர்வுக் குறிப்பில் இரு நிறுவனங்களும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5) கையெழுத்திட்டன. வாடிக்கையாளர்களுக்குப் புதிய அனுபவத்தைக் கொடுக்க அவை முனைகின்றன.
விருந்தோம்பல், வாழ்வியல், சில்லறை விற்பனை, பொழுதுபோக்கு முதலிய துறைகளில் இணைந்து செயல்பட புரிந்துணர்வுக் குறிப்பு வழிவிடும். எஸ்பிஎச் மீடியா திங்கட்கிழமை (அக்டோபர் 6) வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
ஒருங்கிணைந்த உல்லாசத்தலத்தின் வளாகங்களில் கூட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சமையற்கலை வல்லுநர்களின் படைப்புகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள் முதலியவை அவற்றுள் அடங்கும். சமையற்கலை கண்டுவரும் மாற்றங்களிலும் விருந்தோம்பல் துறையின் போக்குகளிலும் அவை கவனம் செலுத்தும்.
எஸ்பிஎச் மீடியா, மரினா பே சேண்ட்ஸ் ஆகியவற்றின் முக்கிய நிகழ்வுகளுக்கும் புரிந்துணர்வுக் குறிப்புப் பொருந்தும்.
வாழ்வியல், பொழுதுபோக்குத் துறையில் முன்னணி வகிக்கும் சிங்கப்பூரின் நிலையை உறுதிசெய்கின்ற வகையில், நிகழ்ச்சிகளில் பங்கெடுப்போருக்கும் கூட்டாகப் பணிபுரிவோருக்கும் உன்னத அனுபவத்தைக் கொடுக்கப் புரிந்துணர்வுக் குறிப்பு முனையும் என்று எஸ்பிஎச் மீடியா கூறியது.