சிங்கப்பூரர்கள் அனைவரும் தங்களுக்கு விருப்பமான மொழிகளில் விரிவான செய்திகளையும் சமூகக் கண்ணோட்டங்களையும் அறிந்துகொள்ளும் வகையில், எஸ்பிஎச் மீடியா நிறுவனம் தனது முதன்மைச் செய்தி வெளியீடுகளின் பன்மொழிப் பதிப்புகளைப் படிப்படியாக அறிமுகப்படுத்தி வருகிறது.
சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளான ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகியவற்றில் செய்திகளைப் பெற வழிவகுக்கும் இத்திட்டத்தின்கீழ், நிறுவனத்தின் ஆங்கில நாளிதழ்களின் உள்ளடக்கங்களுடன், தாய்மொழி நாளிதழ்களின் உள்ளடக்கங்களும் பிற மொழிகளில் செயற்கை நுண்ணறிவின்வழி கிடைக்கச் செய்யப்படுகின்றன.
இத்திட்டத்தின் ஓர் அங்கமாக, சீன மொழி நாளிதழான சாவ்பாவின் புதிய ஆங்கிலப் பதிப்பு வியாழக்கிழமை (நவம்பர் 5) அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது.
தொடக்க நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் தமது துணைவியாருடன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். சுகாதார, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ், அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரித்தம் சிங் உள்ளிட்ட முக்கியச் சமூகத் தலைவர்களும் சீனச் சமூகப் பிரதிநிதிகளும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக, பிஸ்னஸ் டைம்ஸ் நாளிதழ் இவ்வாண்டு மார்ச் மாதத்திலும், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் அக்டோபர் 28ஆம் தேதியும் தங்களது சீன மொழிப் பதிப்புகளை அறிமுகப்படுத்தின.
தாய்மொழி நாளிதழ்களில் முதலாவதாக சாவ்பாவ் தனது ஆங்கிலப் பதிப்பைத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழ் முரசு, பெரித்தா ஹரியான் எனப் பிற தாய்மொழி வெளியீடுகளின் பன்மொழிப் பதிப்புகளும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாவ்பாவ் நாளிதழின் புதிய ஆங்கிலப் பதிப்பு, ஆங்கில மொழி வாசகர்களுக்கு சீன மொழியில் வெளியிடப்படும் செய்திகள், கருத்தாடல்கள், பல்வேறு கண்ணோட்டங்கள் ஆகியவற்றிலிருந்து கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு உள்ளடக்கங்களை வழங்கும்.
சிங்கப்பூரின் சீன மொழி பேசும் சமூகத்தின் அனுபவங்களையும் கவலைகளையும் பிரதிபலிக்கும் கதைகளும் செய்திகளும் இதில் இடம்பெறும்.
தொடக்க நிகழ்ச்சியில், சீன ஊடகக் குழுமத்தின் ஆசிரியர் லீ ஹுவே லெங் சார்பில் அவரது வரவேற்புரையை நாளிதழின் ஆசிரியர் ஆங் யிடிங் வாசித்தார்.
செய்திகளை ஆங்கிலத்தில் வழங்குவது தாய்மொழி நாளிதழ்களின் வாசகர் வட்டத்தைப் பாதிக்குமோ என்ற அச்சமும் கவலையும் சில சமூகங்களிடையே நிலவுவதைத் திருவாட்டி லீ தமது உரையில் சுட்டிக்காட்டினார். இக்கவலைகள் நியாயமானவை என்றும் அவற்றுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
“ஆங்கில மொழிபெயர்ப்புகள் இளைய தலைமுறையினர் சாவ்பாவ் நாளிதழின் தரமான இதழியலை அறிந்துகொள்ளவும் ரசிக்கவும் உதவும். இது சீன மொழி இதழியலுக்கு மாற்றாக அமைவதற்குப் பதில், அதன் மதிப்பை விரிவான வாசகர் வட்டத்திற்கு எடுத்துச்செல்லும் மற்றொரு வழியாகவே பார்க்கப்படுகிறது,” என்று திருவாட்டி லீ கூறினார்.
சாவ்பாவ் நாளிதழுக்கும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கும் இடையே செய்தி உள்ளடக்கப் பகிர்வு ஏறத்தாழ 30 விழுக்காடு மட்டுமே உள்ளதாக அவர் சுட்டினார். எனவே, எஞ்சிய 70 விழுக்காட்டுத் தனித்துவமான செய்திகளையும் ஆய்வுகளையும் பிற மொழி வாசகர்களுக்குக் கொண்டுசேர்ப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
சாவ்பாவ் தனது தனித்துவமான சீன மொழி இதழியல் மரபையும் அடையாளத்தையும் தொடர்ந்து பேணும் என்றும், அதன் ஆங்கிலப் பதிப்பு சீராக இயங்கத் தொடங்கியதும் மலாய், தமிழ்ப் பதிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் தவறுகளும் தவறான தகவல்களும் இடம்பெறக்கூடும் என்பதை ஒப்புக்கொண்ட திருவாட்டி லீ, வாசகர்கள் பொறுமை காக்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். அதேவேளையில், துல்லியமான செய்திகளை வழங்கத் தொடர்ந்து உழைக்கவும் அவர் உறுதியளித்தார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மூத்த துணை அமைச்சர் டான், மொழியாக்கம் என்பது வெறுமனே மொழித் தடைகளை உடைப்பது மட்டுமன்று என்றும், அது சமூகங்களையும் மக்களையும் பிணைப்பதாகும் என்றும் சுட்டினார்.
பன்மொழிச் சமூகமான சிங்கப்பூரில் பிற மொழிச் சமூகங்களின் பார்வைகளையும் பண்பாட்டுச் சூழல்களையும் ஆழமாகப் புரிந்துகொள்வது மக்களிடையேயான பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் என்ற அவர், மாற்று மொழிகளில் வழங்கப்படும் செய்திகளை வாசித்து பிற சமூகங்களின் சிந்தனைகளையும் கருத்துகளையும் அறிந்துகொள்ளுமாறு வாசகர்களைக் கேட்டுக்கொண்டார்.
“செய்தி முதன்முதலில் வெளியிடப்பட்ட மொழியை அறியாத வாசகர்கள் உட்பட, அதிகமான மக்கள் இந்தச் செய்தியியல் உழைப்பால் பயனடைய வேண்டும் என விரும்புகிறோம்,” என்றார் எஸ்பிஎச் மீடியாவின் நிர்வாக இயக்குநர் குவெக் யூ சுவாங்.
பல்வேறு மொழிகளில் செய்திகளை வழங்குவதன் மூலம், வாசகர்கள் விவகாரங்களைப் பல்வேறு கோணங்களில் அணுகவும் ஒருவரையொருவர் சிறப்பாகப் புரிந்துகொள்ளவும் உதவ முடியும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.
செய்தி மொழிபெயர்ப்புகளுக்கு எஸ்பிஎச் மீடியா அதிநவீன செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், பிஸ்னஸ் டைம்ஸ் ஆகிய நாளிதழ்கள் ‘ஏஐ சிங்கப்பூர்’ நிறுவனத்தின் ‘சீ-லயன்’ பெருமொழி மாதிரியைப் பயன்படுத்தித் தானியங்கி மொழிபெயர்ப்புகளை மேற்கொள்கின்றன.
தென்கிழக்காசிய மொழிகளையும் பண்பாட்டுச் சூழல்களையும் புரிந்துகொள்ளும் வகையில் இத்தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
