ஒவ்வொரு வாரமும் பத்து சிங்கப்பூரர்களில் ஒன்பது பேர் எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் 120 தளங்களின் மூலம் தகவல்களைப் பெறுகின்றனர். செயலிகள், சமூக ஊடகப் பக்கங்கள், காணொளிகள், வலையொளிகள் எனப் பலதரப்பட்ட வழிகளில் அவர்கள் இந்த ஊடகத்துடன் இணைந்துள்ளனர்.
வெவ்வேறு தளங்கள், வெவ்வேறு வடிவங்கள் என இத்தகைய பன்முனை உத்தியே செய்திகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் நிறுவனத்தின் கடப்பாடு என்று புதிய நிர்வாகத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள திரு சான் யெங் கிட் கூறியுள்ளார். தலைமை நிர்வாக அதிகாரியாக அவர் இதுவரை செயல்பட்டுவந்தார். புதிய பதவியை ஏற்கும் முன்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.
சிங்கப்பூரர்களின் செய்தி அணுகல் முறைகள் மாறிவருவதைக் குறிப்பிட்டுப் பேசிய திரு சான், பிரதான வாசகர்கள் எங்கு இருக்கின்றனரோ அந்த இடத்திற்குச் சென்று நிறுவனத்தின் தளங்களில் செய்திகளைப் பெற விழைகிறோம் என்றார்.
ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இருந்த தளங்களின் எண்ணிக்கை 50 விழுக்காடு உயர்ந்து 120க்கும் மேற்பட்ட தளங்களை எஸ்பிஎச் மீடியா கொண்டுள்ளது.
நிறுவனத்தின் ஒவ்வொரு செய்தியறையிலும் ஓர் இளம் வாசகர் தளமும் சமூக ஊடகத் தளங்களும் உள்ளன. தமிழ் முரசுக்கு ‘இளைய தலைமுறை’ எனும் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் 300 மில்லியன் பக்கப் பார்வைகளைப் பெறும் எஸ்பிஎச் மீடியா தளங்கள், ஒட்டுமொத்தமாக சிங்கப்பூரின் ஆகப் பெரிய மின்னிலக்க இணைப்பைக் கொண்டுள்ள பெருமையைப் பெற்றுள்ளது என்றார் திரு சான்.
சமூக ஊடகப் பக்கங்களின் கணக்குப்படி மாதத்திற்கு 1.2 பில்லியன் பார்வைகள் பதிவாகின்றன.
வாசகர்களில் 15 விழுக்காட்டினர் காணொளி மூலம் உள்ளடக்கங்களை அணுகும் பொருட்டு எஸ்பிஎச் மீடியா முன்பைப்போல அச்சு நிறுவனம் மட்டுமல்ல, பல்லூடக நிறுவனம் என்று உறுதியுடன் கூறினார் திரு சான்.
எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் தலைவராகக் கடந்த ஐந்து ஆண்டுகள் சேவையாற்றி அக்டோபர் 1ஆம் தேதி ஓய்வுபெற்றார் முன்னாள் அமைச்சர் கோ பூன் வான். எஸ்பிஎச் மீடியா நிறுவனத்திற்கு முந்தைய சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இயங்கியபோதும் நிர்வாகத் தலைவர் என்ற பொறுப்பு இருந்துள்ளது. முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன், முன்னாள் அமைச்சர் லிம் கிம் சான் ஆகியோர் இதற்கு முன்பு நிர்வாகத் தலைவர்களாக இருந்துள்ளனர்.
மின்னிலக்கத் தளங்களிலும் வடிவங்களிலும் உள்ளடக்கம் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய சூழலில், அச்சு செய்தித்தாளின் பங்கு குறித்து தமிழ் முரசு திரு சானிடம் விளக்கம் கேட்டது.
எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் வாசகர்களில் ஐந்தில் ஒருவர் செய்திகளுக்கு அச்சு ஊடகங்களை மட்டுமே நம்பியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோரைப் பிரதானமாகக் கொண்ட இந்தப் பிரிவினர், அச்சுப் பதிப்புகளைத் தொடர்ந்து வெளியிடுவதற்கான பொருளியல் சாத்தியக்கூறை வழங்கும் அளவுக்குப் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.
இருப்பினும், ஏதேனும் ஒரு கட்டத்தில் வாசகர்களின் பழக்கம் மாறும் என்றும் அதற்கேற்ப எஸ்பிஎச் மீடியா நிறுவனமும் மாற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“சமூக ஊடகங்களைப் போலவே கால மாற்றத்திற்கு ஏற்ப, மக்களுக்கு மிகவும் நெருக்கமான, பிரபலமான புதிய தளங்களுக்கு நாம் மாறுகிறோம்,” என்று கூறிய அவர், தற்போதைய எஸ்பிஎச் மீடியா என்பது வெறும் செய்தித்தாள் நிறுவனம் மட்டுமல்ல என்பதை நினைவூட்டினார்.
