செய்தித்தாள்களை விநியோகிக்க எஸ்பிஎச் மீடியா $3 மில்லியன் உதவி

1 mins read
8ca02415-1791-4dfd-8c1b-01a9269bc988
ஒரு வீட்டுக்கு விநியோகிக்க $4 என்ற விகிதத்தில் செய்தித்தாள் விநியோகிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செய்தித்தாள்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் சேவைக்கு இந்த நிதி ஆண்டில் எஸ்பிஎச் மீடியா $3 மில்லியன் உதவித்தொகையை வழங்கி வருவதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி சான் எங் கிட் தெரிவித்து உள்ளார்.

எஸ்பிஎச் மீடியாவின் ஓர் அங்கமான சீன ஊடகக் குழுமத்தின் (CMG) வருடாந்தர சீனப் புத்தாண்டு ஒன்றுகூடல் மற்றும் செய்தித்துறை விருது வழங்கும் நிகழ்வில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) கலந்துகொண்டு அவர் பேசினார்.

செய்தித்தாள் விநியோகிப்போர் எதிர்நோக்கும் சவால்களை அப்போது அவர் எடுத்துரைத்தார்.

வீடுகளுக்கு செய்தித்தாள்களை விநியோகிப்பதற்கான செலவு அதிகரிக்கும் அதேநேரம், மின்னிலக்க வடிவில் பலரும் செய்திகளைப் படிப்பதால் அச்சடிக்கப்பட்ட செய்தித்தாள்களின் சந்தா சுருங்கி வருவதாக திரு சான் தமது உரையில் குறிப்பிட்டார்.

வருவாய் குறைந்து, செலவு அதிகரிப்பதால் செய்தித்தாள் விநியோகிப்போர் எதிர்நோக்கும் சிரமங்களைத் தணிக்கும் நோக்கில், ஒரு வீட்டுக்கு விநியோகிக்க மாதம் $4 என்ற விகிதத்தில் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

2024 ஏப்ரல் முதல் தொடர்ந்து வரும் இந்த உதவித் திட்டம் வரும் மார்ச் மாதம் வரை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திரு சான் தமது உரையில், உண்மை பின்தங்கிவிட்ட இன்றைய உலகில் பத்திரிகைத் துறையின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

“செய்தித்தாள் விநியோகிப்பில் எழும் தேவைகளைத் தொடர்ந்து ஆராய்ந்து நமது விநியோகிப்பாளர்களுக்கும் பங்காளிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்