பகுதி மின்கடத்திச் சில்லுகள்: அமெரிக்கச் சோதனைகளுக்குச் சிங்கப்பூர் உதவும்

பகுதி மின்கடத்திச் சில்லுகள்: அமெரிக்கச் சோதனைகளுக்குச் சிங்கப்பூர் உதவும்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

18 Nov 2026 - 5:19 pm

2 mins read

மணிலா: சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களில் அமெரிக்கா ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் வசதி செய்துதர முடியும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைப் பாதிக்கும் வகையில் புதிய பகுதி மின்கடத்திச் சில்லுக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நிலையில், நவீனச் சில்லுகளின் பயன்பாடு குறித்த அமெரிக்காவின் கவலையைப் போக்க, அரசாங்கம் உதவும் என்றார் திரு வோங்.

மற்ற நாடுகளின் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைச் சிங்கப்பூர் செயற்படுத்துவதில்லை. ஆயினும், அவற்றைத் தவிர்க்கவோ சட்டங்களை மீறவோ சிங்கப்பூரைப் பயன்படுத்தும் வணிகங்கள்மீது தெளிவான, உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) மணிலாவில் ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்குப் பிறகு சிங்கப்பூர் ஊடகங்களிடம் அவர் பேசினார்.

“நாங்கள் சட்டதிட்டங்களை நிலைநிறுத்த விரும்புகிறோம். மேலும் நம்பகமான வணிக நிலையமாகச் சிங்கப்பூரின் நற்பெயரைப் பாதுகாக்க விரும்புகிறோம்,“ என்று திரு வோங் சொன்னார்.

வெளிநாட்டுத் தரவு நிலையங்கள்வழி சீனாவுக்குத் தகவல் கிடைப்பதைக் கட்டுப்படுத்த, நவம்பர் 16ஆம் தேதி அமெரிக்கா புதிய ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை அறிவித்தது.

என்விடியாவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங்கிற்கும் சீன உளவாளியெனச் சந்தேகிக்கப்படும் ஏலிஸ் ஹுவாங் என்ற பெண்ணுக்கும் இடையிலான தொடர்பு வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏலிஸ் ஹுவாங், சிங்கப்பூர் தரவு நிலைய நிறுவனமான மெகாஸ்பீட் இன்டர்நேஷனலின் முன்னாள் நிர்வாகி.

புதிய விதிமுறைகளின்படி, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, இந்தோனீசியா, பிரேசில் ஆகிய நாடுகளுக்குச் சில்லுகளை ஏற்றுமதி செய்ய உரிமம் தேவைப்படும்.

செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேட்டபோது அமெரிக்காவின் புதிய நடவடிக்கைகளின் தாக்கத்தை அரசாங்கம் ஆய்வு செய்துவருவதாகப் பிரதமர் வோங் கூறினார்.

சிங்கப்பூருக்கு விற்கப்பட்டதாகப் பதிவு செய்யப்படும் பெரும்பாலான மேம்பட்ட சில்லுகள் உண்மையில் நாட்டின் எல்லைகளைக் கடப்பதே இல்லை என்றும் மாறாக அவை அவற்றின் இறுதி இலக்குகளுக்கு நேரடியாகவோ மாற்றுக் கப்பல்களின் மூலமாகவோ அனுப்பப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

என்விடியாவின் உலகளாவிய வருவாயில் சிங்கப்பூர் 22 விழுக்காடு பங்கு வகித்தாலும், 2025 புள்ளிவிவரங்களின்படி ஒரு விழுக்காட்டுச் சில்லுகள் மட்டுமே இங்குப் பயன்படுத்தப்படுகின்றன.

“எனவே அமெரிக்கா கொண்டு வந்துள்ள புதிய நடவடிக்கைகளால் (மாற்று ஏற்றுமதி அளவுகளில்) சிறிது தாக்கம் இருக்கும். ஆனால் அந்தத் தாக்கத்தை நம்மால் சமாளிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்,”என்று பிரதமர் வோங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்பிரதமர்லாரன்ஸ் வோங்அமெரிக்காகணினிச் சில்லுஏஐசெயற்கை நுண்ணறிவு