இதய நலன் காக்கும் நாயகர்களாக இளஞ்சிறார்கள்

சிங்கப்பூர் இதய அறநிறுவனத்தின் புதிய திட்டம்

இதய நலன் காக்கும் நாயகர்களாக இளஞ்சிறார்கள்

1 of 2
படம்: சிங்கப்பூர் இதய அறநிறுவனம்
படம்: சிங்கப்பூர் இதய அறநிறுவனம்

28 Feb 2026 - 11:08 pm

2 mins read

சிங்கப்பூர் இதய அறநிறுவனம் “இதய நாயகராகத் திகழுங்கள்’ (Be A Heart Hero) எனும் திட்டத்தைத் சனிக்கிழமை (பிப்ரவரி 28) அதிகாரபூர்வமாக தொடங்கியுள்ளது.

இதயப் பிரச்சினைகள் சார்ந்த நெருக்கடிகளை அடையாளம் காண்பதும் அச்சூழல்களில் உயிரைக் காப்பாற்றுவதில் பங்காற்றுவதற்குத் தேவையான நம்பிக்கையுடன் திறன்களைச் சிறார்களுக்கு வழங்குவதும் திட்டத்தின் நோக்கம்.

5 முதல் 8 வயது வரையிலான சிறார்களுக்கென வடிவமைக்கப்பட்டுள்ளது இத்திட்டம். அவசர மருத்துவச் சேவை எண்ணை அழைப்பதன் மூலமும் முதலுதவி செய்யத் தெரிந்த பெரியவர்களின் உதவியை நாடுவதன் மூலமும் உயிரைக் காப்பாற்றத் தேவையான ஆற்றல்களைத் திட்டம் வழங்கும் என்று நம்பப்படுகிறது.

இதில் சமூகத் தயார்நிலையை வலுப்படுத்தவும் திட்டம் இலக்குக் கொண்டுள்ளது.

இந்நிகழ்ச்சியின் தொடக்கவிழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் கல்வி, நீடித்த நிலைத்தன்மை சுற்றுப்புற அமைச்சுகளுக்கான மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி.

‘‘இந்த நிகழ்வு, சிறார் உட்பட சமூகத்தின் ஒவ்வோர் அங்கத்தினரையும் ஆற்றல்மிக்கவர்களாக்குவதன் வாயிலாகவே இதய நலன்மிக்க நாட்டை உருவாக்க முடியும் என்பதை  நினைவூட்டுகிறது,’ என்றார் அவர். 

பெரியவர்கள் முதலுதவி வழங்குவதைப் பெரும்பாலும் நாம் எண்ணிப் பார்ப்பதுண்டு. ஆனால் இன்று அதைப் போலவே வலிமைவாய்ந்த ஒன்றைக் காண்கிறோம். 

‘‘இதயக் கோளாறு சார்ந்த இடர்கள் ஏற்படுவதைச் சிறார்கள் உணர்ந்து அதற்கேற்பத் துரிதமாகச் செயல்பட்டு, தேவையான உதவியை நாடுவது உள்ளிட்ட உயிர்காக்கும் திறன்களைக் கற்றுக்கொள்கிறார்கள். இதனால் அவர்கள் இதயம் காக்கும் நாயகர்களாக உருவாகிறார்கள்,’’ என்றார் திரு ஜனில்.

இத்திட்டம் குறித்துக் கருத்துரைத்தார் இதய அறநிறுவனத்தின் தலைவர் டான் ஹுவே சீம்.

‘‘ஓர் உயிரைக் காப்பாற்ற பாலர்ப்பள்ளி குழந்தைகள் உதவிக்கு அழைக்கக் கற்றுக் கொள்ளும்போது, அவர்கள் அவசரகாலத்தில் செயல்படும் நம்பிக்கையைப் பெறுகிறார்கள். அத்துடன் முக்கியமான பாடங்களை இல்லங்களுக்கும் கொண்டுசெல்கிறார்கள். இது குடும்பங்களில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது,’’ என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்