சிங்கப்பூரில் சுற்றுப்பயணிகளின் வருகை பெருகியபோதிலும் உயர்ந்துவரும் செலவுகளால் இங்குள்ள விருந்தோம்பல் துறை சில சவால்களைச் சந்தித்து வருகிறது.
ஹோட்டல்களைக் கட்டுவதற்குரிய நிலத்திற்கான செலவுகளும் கட்டுமானச் செலவுகளும் அதிகரிப்பதால் ஹாங்காங் மற்றும் ஜப்பானில் இருப்பதைப்போல சிறிய அறைகளுடனான ஹோட்டல்களை சிங்கப்பூரில் உருவாக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
கிடைக்கும் இடவசதியை சிக்கனமாகப் பயன்படுத்துவதில் சிங்கப்பூரிலுள்ள விருந்தோம்பல் நிறுவனங்கள் முக்கிய கவனம் செலுத்துவதாக அக்கார் (Accor) நிறுவனத்தின் ஆசியா வட்டார தலைமை வளர்ச்சி அதிகாரி ஆண்ட்ரூ லாங்டன் தெரிவித்துள்ளார்.
“நிலத்தின் விலைகள் கூடிக்கொண்டே போகின்றன. கட்டுமானச் செலவுகளும் அதிகரிக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் அறைகளின் அளவு சுருங்குகின்றன. ஹோட்டல்களின் பொதுவான பகுதியும் மற்ற சில இடங்களின் அளவுகூட குறைகின்றன.
“இருப்பினும், சிறிய அறைகளில் தங்குவதை மக்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. தரத்தையும் வடிவமைப்பையுமே அவர்கள் கவனிக்கிறார்கள்.
இதற்கு முன்னர் தோக்கியோ, ஹாங்காங் போன்ற நகரங்களில்தான் இதுபோன்ற நிலவரம் இருந்தது. தற்போது அது சிங்கப்பூரிலும் காணப்படுகிறது,” என்று அவர் விளக்கினார்.
சிங்கப்பூரில் பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட ஹோட்டல்களில் இருக்கும் அறைகளின் அளவைக் காட்டிலும் புதிதாக எழுப்பப்படும் ஹோட்டல்களின் அறைகள் சிறியனவாக உள்ளன.
உதாரணத்திற்கு, கடந்த 1994ஆம் ஆண்டு ஆர்ச்சர்ட் வட்டாரத்தில் திறக்கப்பட்ட ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலின் (Four Seasons Hotel) விருந்தினர் அறைகளின் அளவு 49 சதுர மீட்டரில் இருந்து 58 சதுர மீட்டர் வரை உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல, வசதிமிகுந்த சொகுசு அறைகளின் அளவு 155 சதுர மீட்டர் முதல் 199 சதுர மீட்டர் வரை உள்ளது.
ஆனால், 2022ஆம் ஆண்டு திறக்கப்பட்ட புல்மேன் சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் (Pullman Singapore Orchard) ஹோட்டலின் சாதாரண அறைகளின் அளவு 26 சதுர மீட்டரிலிருந்து 38 சதுர மீட்டர் வரையிலும் சொகுசு அறைகளின் அளவு 48 சதுர மீட்டரிலிருந்து 116 சதுர மீட்டர் வரையிலும் உள்ளன.
‘புல்மேன் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசோர்ட்ஸ்’ என்னும் ஹோட்டல் அக்கார் நிறுவனத்திற்குச் சொந்தமானது.
அந்த ஹோட்டல் தனது உருமாற்ற அறை (Transforming Room) பற்றிய அறிவிப்பை வியாழக்கிழமை (நவம்பர் 21) வெளியிட்டது.
அதில் தங்க வருவோர் கைப்பேசிச் செயலி வாயிலாக அறையின் வசதிகளை தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.
சிங்கப்பூரின் ஹோட்டல் அறைகளின் வாடகையும் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.
2019 செப்டம்பரில் $235 ஆக இருந்த அறைகளின் சராசரி வாடகை, தற்போது $316 என்று அதிகரித்துள்ளதாக ‘புளூம்பெர்க்’ செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

