சிங்கப்பூர் பொருளியல் 0% முதல் 2% வரை வளரும் என முன்னுரைப்பு

2 mins read
b695aa14-bea2-419f-a9cb-c583ec47b368
சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி இவ்வாண்டின் முதல் காலாண்டில் 3.9 விழுக்காடு வளர்ச்சி கண்டது.  - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் இவ்வாண்டுக்கான பொருளியல் வளர்ச்சி 0 விழுக்காடு முதல் 2 விழுக்காடு வரை இருக்கும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு முன்னுரைத்து உள்ளது.

இவ்வாண்டின் எஞ்சிய காலப் பகுதிக்கான வெளிப்புறத் தேவை நிலவரத்தில் சற்று முன்னேற்றம் காணப்பட்டபோதிலும் வளர்ச்சி குறித்த கணிப்பில் பெரிய மாற்றமில்லை என்று அமைச்சு வியாழக்கிழமை (மே 22) வெளியிட்ட காலாண்டு பொருளியல் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

அண்மைய வாரங்களில் உலகளாவிய பொருளியல் நிலவரத்தில் சாதகமான அம்சங்கள் தோன்றியபோதிலும் சில குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற போக்கால் வளர்ச்சி கீழ்நோக்கி சரிவதற்கான அபாயங்கள் தென்படுவதாக அது தெரிவித்து உள்ளது.

சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி இவ்வாண்டின் முதல் காலாண்டில் 3.9 விழுக்காடு வளர்ச்சி கண்டது. ஏப்ரல் மாதம் கணிக்கப்பட்ட 3.8 விழுக்காட்டைக் காட்டிலும் அது சற்று அதிகம்.

காலாண்டுக்குக் காலாண்டு சரிக்கட்டப்படும் வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் அது முதல் காலாண்டில் 0.6 விழுக்காடு சுருங்கியது.

கடந்த ஆண்டின் நாலாம் காலாண்டில் பதிவான 0.5 விழுக்காடு வளர்ச்சியின் தலைகீழ் மாற்றமாக அது அமைந்தது.

மொத்த விற்பனை வர்த்தகம், உற்பத்தித் துறை, நிதித் துறை மற்றும் காப்பீட்டுத் துறைகளில் பதிவான வளர்ச்சி முதலாம் காலாண்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்தது.

அமெரிக்காவின் வரி உயர்வு எதிர்பார்க்கப்பட்டதன் காரணமாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் வளர்ச்சிக்கு ஓரளவு உதவின.

நேர்மாறாக, தங்குமிடத் துறை, உணவு-பானச் சேவைத் துறை ஆகியவற்றின் வளர்ச்சி சுருங்கியது.

முதலாம் காலாண்டின் செயல்திறனையும் அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகப் பதற்றம் தணிந்ததையும் கவனத்தில் கொண்டு, ஏப்ரல் மாதக் கணிப்பை அமைச்சு வெளியிட்டது.

அமெரிக்கா அடுத்தடுத்து அறிவித்த வரி உயர்வு காரணமாக சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 1 விழுக்காடு முதல் 3 விழுக்காடு வரை இருக்கக்கூடும் என்று அப்போது அமைச்சு முன்னுரைத்து இருந்தது.

அதன் பிறகு 90 நாள்களுக்கு வரி உயர்வை நிறுத்தி வைப்பதாக அமெரிக்காவும் சீனாவும் அறிவித்ததைத் தொடர்ந்து பதற்றங்கள் குறையத் தொடங்கி உள்ளன. வர்த்தக உடன்பாடு காண அவை இரண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்