சிங்கப்பூர் முக்கிய துறைகளின் ஏற்றுமதி கடந்த ஆண்டு மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியது.
2023ஆம் ஆண்டு சுருங்கிய ஏற்றுமதிகள், கடந்த ஆண்டு அதிகமான மின்னணு உற்பத்தியின் ஏற்றுமதி காரணமாக மேல்நோக்கி வளர்ந்தன.
மின்னணு சாராத பொருள்களின் ஏற்றுமதி குறைந்த நிலையிலும் கடந்த ஆண்டு முழுமைக்குமான ஏற்றுமதி வளர்ச்சி 0.2 விழுக்காடாகப் பதிவானது.
‘என்டர்பிரைஸ் சிங்கப்பூர்’ அமைப்பு தனது வர்த்தக மறுஆய்வு அறிக்கையில் இந்தத் தகவல்களைக் குறிப்பிட்டு உள்ளது. அந்த அறிக்கை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) வெளியிடப்பட்டது.
அதேநேரம், நடப்பு ஆண்டுக்கான எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதியின் வளர்ச்சி விகிதம் 1 முதல் 3 விழுக்காடு வரை இருக்கும் என அந்த அமைப்பு முன்னுரைத்து உள்ளது.
உலகப் பொருளியலுக்கும் வர்த்தகத்துக்கும் வெளிப்புற நிலவரம் ஆதரவானதாகத் தொடரும் என்பதால் அந்தக் கணிப்பு என்றும் அது விளக்கி உள்ளது.
இருப்பினும், பெரும்பொருளியல் நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மோதல்கள் குறிப்பிடத்தக்க அளவிலான நிச்சயமற்ற போக்குகள் இருக்கும் என்றும் அதன் காரணமாக எண்ணெய் சாரா ஏற்றுமதியின் வளர்ச்சி இவ்வாண்டு கீழிறங்கும் அபாயம் உள்ளது என்றும் அது தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
அந்த ஏற்றுமதி 2023ஆம் ஆண்டு 13.1 விழுக்காடு சுருங்கிய நிலையில் கடந்த ஆண்டு 0.2 விழுக்காடு வளர்ச்சி என்னும் சாதகமான நிலைக்குத் திரும்பியது.
தொடர்புடைய செய்திகள்
இந்த வளர்ச்சி, முன்னுரைப்பை ஒட்டி உள்ளது. 2024ஆம் ஆண்டு முழுமைக்குமான எண்ணெய் சாரா ஏற்றுமதி ஏறத்தாழ 1 விழுக்காடு வளரும் என நிபுணர்கள் முன்னுரைத்து இருந்தனர்.
கடந்த ஆண்டு மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி, முந்திய ஆண்டைக் காட்டிலும் 8.2 விழுக்காடு விரிவடைந்தது ஒட்டுமொத்த ஏற்றுமதியின் ஏற்றத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
உலக அளவில் மின்னணுத் துறை மீட்சி கண்டு வருவதன் பலனாக சிங்கப்பூரில் அந்தத் துறையில் அதிகமான ஏற்றுமதி பதிவானது.
அதேநேரம், மின்னணு சாராத ஏற்றுமதியின் வளர்ச்சி விகிதம் 2023ஆம் ஆண்டைக் காட்டிலும் 1.9 விழுக்காடு சரிந்தது. மருந்தியல் துறையிலும் கப்பல் மற்றும் படகுகள் துறையிலும் காணப்பட்ட ஏற்ற இறக்கங்கள் அந்தச் சரிவுக்கு வழிவகுத்தன.
உலகின் பெரிய சந்தைகளுக்கான சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதியின் வளர்ச்சி சரிந்தது. குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதி ஆகப்பெரிய அளவில் 21.4 விழுக்காடு வீழ்ச்சி கண்டது. அதற்கு அடுத்து, ஜப்பானுக்கான ஏற்றுமதி 17.6 விழுக்காடும் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 6.6 விழுக்காடும் சரிவைச் சந்தித்தன.