தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிறுவனங்களுக்கான புதிய மானியம் தொடங்கப்படும்; ஊழியர்க்கான ஆதரவு விரிவாக்கம்

2 mins read
ffb8279f-6752-4ba5-9f19-2f5b86dca7e5
வியாழக்கிழமை (ஜூலை 10) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் (இடமிருந்து) சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனத் தலைவர் டான் ஹீ டெக், அமைச்சர் டான் சீ லெங், என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங், துணைப் பிரதமர் கான் கிம் யோங், சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனத் தலைவர் டியோ சியோங் செங், அமைச்சர் ஜோசஃபின் டியோ ஆகியோர் உள்ளனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் நிறுவனங்கள் புதிய வரிச்சூழலுக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள உதவும் ஒரு புதிய மானியத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று சிங்கப்பூர் பொருளியல் மீள்திறன் பணிக்குழு அறிவித்துள்ளது.

2025 அக்டோபரில் தொடங்கப்படவுள்ள வணிகத் தழுவல் மானியம் (Business Adaptation Grant) ஒரு நிறுவனத்திற்கு அதிகபட்சமாக $100,000ஆக இருக்கும் என்றும் நிறுவனங்கள் இதற்கு இணையாக நிதியளிக்க வேண்டும் என்றும் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நேற்று (ஜூலை 10) தெரிவித்தார்.

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அதிக அளவில் ஆதரவுபெறும். அதே நேரத்தில், பெரிய நிறுவனங்கள் சிறிய தொகையைப் பெறத் தகுதிபெறும். இதுகுறித்த மேல்விவரங்கள் அக்டோபரில் அறிவிக்கப்படும்.

இந்த மானியம் இரண்டு பரவலான வணிகக் குழுக்களுக்கு ஆதரவளிக்கும் என்றார் டாக்டர் டான்.

வெளிநாட்டுச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் அல்லது அங்கு செயல்படும் நிறுவனங்களுக்கு தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள், வர்த்தக இணக்கம், சட்ட மற்றும் ஒப்பந்த விவகாரங்கள், விநியோகத் தொடர் மேம்படுத்தல், சந்தை பல்வகைப்படுத்தல் தொடர்பான ஆலோசனை சேவைகளை இது உள்ளடக்கும்.

உள்ளூர் அல்லது வெளிநாட்டு உற்பத்தி நடவடிக்கைகளைக் கொண்ட வணிகங்களுக்குத் தளவாடங்கள், இருப்பு வைத்தல் செலவுகள் போன்ற மறுசீரமைப்புச் செலவுகளை ஈடுசெய்ய இந்த மானியம் உதவும்.

அரசாங்கத்தால் வணிக நடவடிக்கைகளின் ஒவ்வோர் அம்சத்தையும் ஈடுசெய்யவோ உள்ளூர், வட்டார அல்லது அனைத்துலக வெளிப்பாட்டைக் கொண்ட ஒவ்வொரு நிறுவனத்தையும் சென்றடையவோ முடியாது என்பதை டாக்டர் டான் சுட்டினார்.

ஆனால், இந்த மானியம் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கும் பெரிய நிறுவனங்களுக்கும் இடையில் வேறுபடுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“சிறிய, நடுத்தர நிறுவனங்கள் கூடுதல் ஆதரவைப் பெறும், ஏனெனில் அவை சிங்கப்பூரின் ஊழியரணியில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு வகிக்கின்றன. ஊழியர்களில் கணிசமானோர் சிங்கப்பூரர்களாவர்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்