சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான கடற்பாலம் கட்டப்பட்டு ஜூன் 28ஆம் தேதியுடன் 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
பிரதமர் லாரன்ஸ் வோங் இதையொட்டி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், இருதரப்புக்கும் நன்மையளிக்கும் கூடுதலான திட்டங்களை மலேசியாவுடன் இணைந்து மேற்கொள்ள சிங்கப்பூர் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளும் தற்போது சுகாதாரம், கல்வி, கலாசாரம், வர்த்தகம் போன்ற துறைகளுடன் வளர்ந்துவரும் துறைகளான மின்னிலக்கப் பொருளியல், புதுப்பிக்கப்படும் எரிசக்தி போன்றவற்றிலும் கூட்டுத் திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன என்றார் அவர்.
“கடந்த 100 ஆண்டுகளாக இந்தக் கடற்பாலம் இரு நாட்டு மக்களிடையே தொடர்புக்கான பாலமாகச் சேவை வழங்கி வந்துள்ளது,” என்று திரு வோங் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த 100 ஆண்டுகளுக்கான தொடர்புகளையும் உறவுகளையும் வலுப்படுத்த விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையிலான கடற்பாலம் 1924ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
உலகின் ஆகப் பரபரப்பான எல்லைப் பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் இப்பாலத்தை அன்றாடம் ஏறக்குறைய 300,000 பேர் கடந்து செல்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
முதலில் மூன்று தடங்களைக் கொண்டிருந்த இப்பாலம் 1976ஆம் ஆண்டில் ஆறு தடங்களுடன் விரிவாக்கம் கண்டது.
இந்தக் கடற்பாலத்தின் 100ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ஜூன் 28ஆம் தேதி காலை, பாலத்தின் மத்தியில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் அதில் கலந்துகொண்டார். மலேசியா சார்பில் ஜோகூர் மாநில முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸியும் ஜோகூர் ஆட்சியாளரான துங்கு இஸ்மாயிலும் இதில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில், அமைச்சரும் ஜோகூர் முதல்வரும் பரிசுகளைப் பரிமாறிக்கொண்ட பிறகு கூண்டில் அடைக்கப்பட்டிருந்த 100 புறாக்களை விடுவித்து விண்ணில் சுதந்திரமாகப் பறக்கவிட்டனர்.
நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய இரண்டு வாரங்கள் ஆனதாக ஜோகூர் மாநிலத் துணைச் செயலர் அலுவலகத் துணை அதிகாரி சிவமணி மாணிக்கம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
இரு நாட்டு அமைதியைக் குறிக்கும் வண்ணம் புறாக்கள் பறக்கவிடப்பட்ட பிறகு, ‘ஏரோஃபிளை ஜோகூர் ஆர்சி’ குழுவின் உறுப்பினர்கள் தாங்களே உருவாக்கிய ஒன்பது வகை மாதிரி-வானூர்திகளை இயக்கிக் காட்டினர். அவற்றில் ஒன்று பறவையைப்போல வடிவமைக்கப்பட்டிருந்தது.
டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் ஜூன் 28ஆம் தேதி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் இந்தக் கடற்பாலம் தனித்துவமான நட்பு, உறவுப் பிணைப்பின் அடையாளம் என்றும் பின்னிப் பிணைந்த சிங்கப்பூர்- ஜோகூர் வரலாற்றின் சின்னம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து வலுப்படும் வேளையில் வருங்காலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காண இருதரப்பும் கடப்பாடு கொண்டுள்ளன.
“விரைவு ரயில் திட்டமும் ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரத் திட்டமும் நிறைவடையும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்,” என்று டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தமது பதிவில் கூறியுள்ளார்.


