ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்திருப்பதன் தாக்கத்தை சிங்கப்பூர் கவனித்து வருவதாக வெளியுவு அமைச்சு தெரிவித்து உள்ளது.
வெளிநாட்டினரை மாணவராகவும் கல்விமானாகவும் சேர்க்க அந்தப் பல்கலைக்கழகத்திற்கு இருந்த உரிமை ரத்து செய்யப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் அண்மையில் அறிவித்தது.
அந்த அறிவிப்பை மே 22ஆம் தேதி அமெரிக்க உள்துறை அமைச்சர் கிறிஸ்டி நோயெம் வெளியிட்டார். அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவில் இருக்கும் ஏறத்தாழ 6,800 அனைத்துலக மாணவர்கள் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர்.
அந்த மாணவர்கள் ஹர்வட் பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக வேறொரு கல்வி நிலையத்தில் சேர வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கான ஹார்வர்டின் உரிமையை டிரம்ப் நிர்வாகம் ரத்து செய்ததற்கு அமெரிக்க நீதிபதி ஒருவர் தற்காலிகத் தடை விதித்துள்ளார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழக அனைத்துலக அலுவலகத்தின் தகவல்படி, 151 சிங்கப்பூரர்கள் மாணவராகவும் கல்விமானாகவும் அங்கு சேர்ந்து உள்ளனர்.
அவர்கள் அடுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வாஷிங்டன் நகரில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சுடனும் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சுடனும் கலந்து பேசி வருவதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு செவ்வாய்க்கிழமை (மே 27) அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.
மேலும், பாதிக்கப்படும் மாணவர்களுக்கான உதவி நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, குழுத் தொடர்பு தளம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஹர்வர்டில் உள்ள சிங்கப்பூர் மாணவர்கள் அனைவரும் அந்தத் தளம் வழியாக ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
வெளியுறவு அமைச்சின் தூதரகத் துறையும் சிங்கப்பூர் அனைத்துலகக் கட்டமைப்பும் (SGN) அந்தத் தளத்தை நிர்வகிக்கின்றன.
பாதிக்கப்படும் ஹார்வர்ட் சிங்கப்பூர் மாணவர்கள் https://go.gov.sg/singaporeanharvardstudents என்னும் இணையத்தளத்தில் பதிவுசெய்துகொள்ளலாம்.
மேலும் ஒரு ஆதரவு நடவடிக்கையாக, வாஷிங்டன்னில் உள்ள சிங்கப்பூர் தூதர் மே 30ஆம் தேதி மாலை 5 மணியளவில் (சிங்கப்பூர் நேரம் மே 31, அதிகாலை 5 மணி) இணையம் வாயிலாக ஹார்வர்ட் சிங்கப்பூர் மாணவர்களிடம் உரையாற்ற உள்ளார்.