சிங்கப்பூர் அதிகாரிகள், 95 சமூக ஊடகக் கணக்குகளைத் தடைசெய்ய ஐந்து சமூக ஊடகத் தளங்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
சிங்கப்பூர் சீனாவால் கட்டுப்படுத்தப்படுவதாகக் கூறும் பொய்த் தகவல்களை அந்தக் கணக்குகள் வெளியிட்டதற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரை நேரடியாகக் குறிவைக்கும் பகைமையுள்ள தகவல் பிரசாரத்தை முன்வைக்க இந்தக் கணக்குகள் பயன்படுத்தப்படலாம் என நம்புவதற்கான காரணங்கள் உள்ளதாக உள்துறை அமைச்சு வெள்ளிக்கிழமை (ஜூலை 19) கூறியது.
சிங்கப்பூரின் நான்காம் தலைமுறைத் தலைவரைத் தேர்வுசெய்வதில் சீனா சம்பந்தப்பட்டதாகவும் அந்தக் கணக்குகள் வெளியிட்ட பதிவுகள் கூறின. சீன கம்யூனிஸ்ட் கட்சி விமர்சகரும் தொழிலதிபருமான குவோ வெங்குயியுடன் அந்தக் கணக்குகள் தொடர்புடையவை.
வெளிநாட்டுத் தலையீடு (எதிர்நடவடிக்கைகள்) சட்டத்தின்கீழ், சிங்கப்பூரைச் சேர்ந்த பயனாளர்களிடமிருந்து அந்தக் கணக்குகளைத் தடைசெய்ய ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், யூடியூப், டிக்டாக்ட், எக்ஸ் தளங்களுக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்தது.
2024 ஏப்ரல் 17க்கும் மே மாதத்துக்கும் இடையே அந்தக் கணக்குகள் 120க்கும் மேற்பட்ட பதிவுகளை வெளியிட்டிருந்தன. அவற்றில், சிங்கப்பூரின் தலைமைத்துவ மாற்றம் குறித்த காணொளிகளும் இடம்பெற்றிருந்ததை அமைச்சு சுட்டியது.
தன் வழக்கமான கண்காணிப்பு மூலம் அந்தக் கணக்குகளை தான் கண்டறிந்ததாக அமைச்சு கூறியது.
அந்த 95 கணக்குகளில் 92 கணக்குகள், குவோவுடனும் அவருடன் சம்பந்தப்பட்ட அமைப்புகளுடனும் நேரடியாக தொடர்புடையவை.
தொடர்புடைய செய்திகள்
எஞ்சிய மூன்று கணக்குகள், ‘ஹிமலயா சிங்கப்பூர்’ எனும் அமைப்பின் சிங்கப்பூர் அத்தியாயத்துக்குச் சொந்தமானவை என அமைச்சு சொன்னது.
அந்த 95 கணக்குகளில் ஏதேனும் சிங்கப்பூரர்களால் இயக்கப்படுகின்றனவா என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என அமைச்சு கூறியது.
சிங்கப்பூருடன் தொடர்புடைய மற்ற நிகழ்வுகள் குறித்து குவோவின் கட்டமைப்பு பதிவிட்டுள்ளதாக அமைச்சு சொன்னது.
சிங்கப்பூரின் அரசியல் தலைமைத்துவம் குறித்த பதிவுகள் ஒருபுறமிருக்க, அந்தச் சமூக ஊடகக் கணக்குகள் மற்ற பொய்த் தகவல்களையும் கூறின. சிங்கப்பூரில் சீன அரசாங்கம் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறுவது அவற்றில் அடங்கும்.
பகைமையுள்ள தகவல் பிரசாரத்துக்காக பயன்படுத்தப்படக்கூடிய கணக்குளைத் தடைசெய்ய சமூக ஊடகத் தளங்களுக்கு உள்துறை அமைச்சின் இந்த உத்தரவால், சிங்கப்பூரின் வெளிநாட்டுத் தலையீடு (எதிர்நடவடிக்கைகள்) சட்டம் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.